பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

வல்லிக்கண்ணன்


பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுகிற ஆண்களும் பெண்களும் தங்கள் அழகியல் ஈடுபாடுகளை அரிக்கக் கொடுத்துவிட்டு போலியான திருப்தி, தர வேட்கையின்மை, சோம்பேறித்தனம் இவற்றைச் சுவீகரித்துக் கொள்கிறார்கள். இவர்களில் தர ஆர்வமுள்ள சிலரது வளர்ச்சியையாவது சீராக்க ஒரு குவிமையமாக இருந்து ஒன்று சேர்த்துவைக்க முடிந்தால் 'வைகை' சந்தோஷப்படும்.

இதுவரை பொதுவாகத் தரப்பட்டிருக்கிற அளவில் நாங்கள் உணர்ந்திருக்கிற எங்கள் ஈடுபாடுகள் ஓரிரு இதழ்களில் தெளிவாகும்.

Original Composition Esmr வெளியிடுவதற்கு நிறையப் பத்திரிகைகள் இருக்கின்றன. என்றாலும் 'வைகை' இவற்றை அநேகமாகப் புறக்கணிக்கா. பிரசுரத்துக்கு விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதில் வைகைக்கு ஒரு வழிமுறை உண்டென்றாலும் மாறான கருத்துக்களும் பிரசுரமாகும்-அவற்றுக்கு விவாதத்தைத் தொடங்கி வைக்கிற அளவு ஆழமான முக்கியத்துவம் உண்டென்றால்.

எந்த தியாகமும் செய்யாமல் தற்குறிகளெல்லாம் புகழ் பெறுவதும் கெளரவிக்கப்படுவதும் இங்கு மட்டுமே நடக்க முடிந்த விபத்துக்கள். எச்சரிக்கைக் குரல்கள்-பிரக்ஞை, வைகை என- நிறைந்தால் விபத்துக்கள் குறையலாம்".

வைகையின் ஆசிரியர் ஆர். குமாரசாமி. அவரும் அவருக்குத் துணை சேர்ந்திருந்தவர்களும் சிறு பத்திரிகையான 'பிரக்ஞை'யை முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்கள் என்பது மேலே கண்ட அறிவிப்பிலிருந்து புரியும். மேலும், அக்காலத்திய சிறு பத்திரிகைகள் பலவற்றைப் பெரிதும் பாதித்து வந்த வெங்கட்சாமிநாதனின் கருத்துக்களிலும் எழுத்துக்களிலும் மிகுந்த ஈடுபாடும் அட்மிரேஷ' னும் கொண்டவர்கள் அவர்கள் என்பதை முதலாவது இதழே புலப்படுத்தியது.

முதல் இதழின் முதல் கட்டுரை 'முகங்கள்' ( சி. மோஹன்) வெ. சாமிநாதனுக்கு ஆதரவாக, 'கணையாழி'யின் முஸ்தபாவையும் இந்திரா பார்த்தசாரதியின் போக்கையும் எதிர்த்து எழுதப்பட்ட நீண்ட பதில் (5 பக்கங்கள்) ஆகும். அடுத்தது, 'அக்கிரகாரத்தில் கழுதை' (வெ. சா. வின் நாடகம்) பற்றிய தி. ஜானகிராமன், கந்தர ராமசாமி, சி. மோஹன் கடிதங்கள், (8 பக்கங்கள்). மூன்றாவதாக, 'அக்கிரகாரத்தில் கழுதை' பற்றி ந. முத்துசாமியின் 13 பக்கக் கட்டுரை.

'வைகை' இதழ்களில் வெ. சா. ஒரு கட்டுரைகூட எழுதவில்லை.