பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

வல்லிக்கண்ணன்


சுந்தர ராமசாமியின் 'பல்லக்குத் தூக்கிகள்' கதைத் தொகுதி பற்றி சி. மோஹன் ஒரு கட்டுரை எழுதினார்.

அகிலனுக்கு, 'சித்திரப் பாவை' நாவலுக்கு, ஞானபீடம் பரிசு வழங்கப்பட்டதை வைகை கண்டித்தது. அகிலனின் எழுத்தாற்றலை வைகைக் குழுவினர் அங்கீகரிக்கவில்லை. மாயவரத்தில் நடைபெற்ற நாவல் விழாவின்போது அகிலன் பேசிய உரையைக் குறைகூறி விமர்சனக் கட்டுரை வெளியிட்டது. பின்னர், அகிலனின் ஞானபீடப் பரிசு உரை மொழி பெயர்ப்பு வெளியிட்டு, சி. மோஹன் விமர்சனம் எழுதினார்.

கல்வித் துறையில் நிகழும் சீர்கேடுகளை வைகை சுட்டிக்காட்டி, கடுமையாக விமர்சித்தது. விசேஷமாக, மதுரைப் பல்கலைக்கழகம் அதன் தாக்குதலுக்கு முக்கிய இலக்காக அமைந்திருந்தது. பாடநூலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பின் தன்மை குறித்தும், ஒப்பியல் இலக்கியம் சம்பந்தமான ஆய்வு பற்றிய ஒரு பேராசிரியரின் நூலையும் வன்மையாகக் கண்டனம் செய்து கட்டுரைகள் எழுதப்பட்டன.

ஞானி அவ்வப்போது கட்டுரைகள் எழுதி, கனமான விஷயங்கள் குறித்து சிந்தனைகளை வெளிப்படுத்தினார். வெ. சாமிநாதனின் 'பாலையும் வாழையும்' கட்டுரைகளைத் தொடர்ந்து 'வாலையா? வாழையா?-தொடர்ந்து தேடல்' என ஞானி எழுதிய கட்டுரை குறிப்பிடத்தகுந்தது. இந்தியன் பிலாசபி பற்றி தேவி பிரசாத் சட்டோபாத்யாய எழுதிய நூலுக்கு ஒரு விரிவான விமர்சனம் ( 12 பக்கங்கள் ) எழுதியிருக்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை விமர்சித்து 'மணல்மேட்டில் ஒரு அட்டை வீடு' என்ற நீண்ட கட்டுரையில் சிந்தனைகளை வளர்த்திருக்கிறார்.

சிறு பதிப்பாளர் பிரச்னைகளில் வைகை ஆர்வம் காட்டியது. 'க்ரியா' ராமகிருஷ்ணன் கட்டுரைகள் சிலவற்றை வெளியிட்டது.

புத்தக விமர்சனக் கட்டுரைகளை அதிகம் வெளியிட 'வைகை' ஆசைப்பட்டது. ஆனாலும், அதன் எண்ணம் நிறைவேறவில்லை. இதை 5.7 இதழ்களில் வந்துள்ள அறிவிப்புகள் எடுத்துக்காட்டும்.

'வெளியாகும் புத்தகங்களுக்கு விமர்சனம் மிகவும் தேவையான ஒன்று. நல்ல முறையில் விமர்சனங்கள் வெளியிடுகிறோம். அனுப்பித் தாருங்கள். புத்தக விமர்சனங்களுக்கு மட்டும் (வெளியிடுபவைகளுக்கு மட்டும்) சன்மானம் உண்டு ( வைகை-6). & .