பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

139


புகுந்து வளர்கிற போலித்தனங்கள் குறித்தும் 'வைகை' அவ்வப்போது சிந்தனைக் குறிப்புகள் எழுதியது.

நாட்டியம், திரைப்படம் பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டது. ட்ரூ ஃபோவும் பிரெஞ்சு திரைப்படக் கலையும் (வெ. ஸ்ரீராம்) கட்டுரை பல இதழ்களில் தொடர் அம்சமாக இடம் பெற்றது.

அயல் நாடுகளின் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளும் (பிரக்ஞை, வைகை போன்ற) சிறு பத்திரிகைகளில் பிரசுரமாவது தேவையற்றது; இவை நமக்கு நேரடியான சம்பந்தம் அல்லாதவை என்ற ரீதியில் கண்டனங்கள் எழுந்தன என்று வைகை குறிப்பிட்டு, இவற்றின் அவசியத்தை விளக்கி ஒரு தலையங்கம் எழுதியது.

“இந்த வாழ்க்கை பற்றி அவ்வளவு நம்பிக்கையற்ற பார்வையை, எனவே இதை மாற்ற - வேண்டிய தீவிரத்தைக் காட்டுகிறவை சிறு பத்திரிகைகள். அரசியலிலும், கலையிலும், இலக்கியத்திலும் பாமரத் தனத்தை, வியாபார ஆதிக்கத்தை எதிர்ப்பது இவற்றின் குணம். இலக்கியம் பிரதான இடம் பெற்றாலும் பிற துறைகளிலும் தரக்குறைவை, நேர்மையின்மையை இவை எதிர்க்கின்றன. இந்த வாழ்வின் பயனின்மையும், முரண்பாடுகளும், மாறுதலுக்கான அவசியமும் சினிமாவில், நாடகத்தில், கல்வியில், அரசியலில் உணரப்பட்டிருக்க முடியும். இங்கு முதலாக இது எழுத்தில் உணரப்பட்டிருக்கிறது. எனவே சிறு பத்திரிகைகள் சினிமா, அரசியல் இவற்றில் பார்வை செலுத்துவது வரவேற்கப்பட வேண்டியது மட்டுமல்ல, இயற்கையானதும் அவசியமானதும்கூட.

இந்தக் கட்டுரைகள் எழுதப்படுகிற தொனியும் நோக்கமும்தான் இவற்றின் relevance ஐத் தீர்மானிக்கும். வெறும் தகவல் தருகிறவை என்ற அளவில்கூட இக் கட்டுரைகள் உபயோகமானவையே. இவற்றில் Snob கள் இருக்கக்கூடும். அவற்றைச் சுட்டிக்காட்டாமல் மொத்தமாக எல்லாவற்றையும் நிராகரிப்பது விவரமற்ற செய்கை. இதுபோன்ற கட்டுரைகள் உபயோகப்படுவதற்கு சந்தர்ப்பம் வேண்டும். அரசியல் மாற்றத்தில் அடுத்த கட்டத்திற்குப் போவதற்கு இத்தகைய அறிவு பயன்படும் என்று வைகை நினைக்கிறது” ( வைகை-14)

வைகை ‘கல்கி' பத்திரிகை அளவில், நல்ல வெள்ளைத் தாளில் அச்சாகி வந்தது. முதல் வருடம் ஒவ்வொரு இதழும் 34 பக்கங்கள் ( அட்டை தனி )-சில சமயம் அதிகமாகவும்-கொண்டிருந்தது. பின்னர்,