பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

141


விஷயம் இலக்கிய விவகாரமாகி சர்ச்சிக்கப்பட்டது. கு. ப. ரா, க. நா. சு. சிதம்பர சுப்ரமண்யம் ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டார்கள். ‘சந்தேகத் தெளிவு' என்று புதுமைப்பித்தன் விரிவான கட்டுரை எழுதினார். ,

இலக்கிய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்த விவாதத்தை முழுமையாக வைகை மறுபிரசுரம் செய்தது பாராட்டப்பட வேண்டிய நற்பணி ஆகும். 'மணிக்கொடி' யில் வெளியான சில புத்தக மதிப்புரைகளையும் வைகை பிரசுரித்தது. -

இவ்விஷயங்களைக் கொண்ட 27, 28 இதழ்களுக்கு முன்னர் சில இதழ்கள் வெளியிடப்படவில்லை. இது பற்றிய ஒரு விளக்கம் 27-ம் இதழில் காணப்படுகிறது. அது வைகையின் கொள்கை மாற்றத்தையும், ஆசை நிறைந்த திட்டத்தையும் காட்டுகிறது. கதை, கவிதைகள் போன்ற படைப்பு முயற்சிகளைப் பிரசுரிக்க மறுத்து வந்த வைகை அந்தப் போக்கைக் கைவிட விரும்பியது.

“25-ம் வைகைக்கு மேல் வரும் வைகைகளில் 3, 6, 9- ல் முடிபவை (உ-ம். 26, 29, 33, 36 ) படைப்புகளுக்காக ஒதுக்கலாம் என எண்ணம். வாசகர்கள் அபிப்பிராயம் வரவேற்கப்படுகிறது. நாடகம், கவிதை, சிறுகதைகள் முதலியன இடம்பெறும். நாடகங்களைத் தேர்ந் தெடுக்க நிஜ நாடகக் குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இதுபோல் சிறுகதைகளுக்கு ஒரு குழுவினரும், கவிதைக்கு ஒரு குழுவினரும் தேவைப்படுகிறது. வாசகர்கள் இது குறித்து ஏதாவது யோசனை சொல்வதாக இருந்தாலும் வரவேற்கப்படுகிறது.

யாத்ரா மார்க்கம் 32 பக்கங்களுக்குள் வரும் என்று எதிர்பார்த்தேன். 50 பக்கங்கள் வரும் என்ற நிலை ஏற்பட்டதும் 2 இதழ்களாக வெளியிட்டு ஒரே நேரத்தில் அனுப்ப வேண்டி ஏற்பட்டது. தொடர் நம்பராக வர வேண்டும் என்பதற்காக இந்த வைகை 27, 28 என வந்துள்ளது. இடையில் 25, 26 இனிமேல்தான் வரும். இதில் 25 பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தாரின் அனுபவங்கள் பற்றியதாகவும், 26 இதழ் படைப்புகள் தாங்கியும் வரும். தவறுதலாக, அனுப்பவில்லை என எண்ணிக் கடிதம் எழுத வேண்டாம். அடுத்த மாதம் 25 வரும். அதற்கு அடுத்த மாதம் 26 வரும்.”

இப்படித் தெளிவாகத் திட்டம் தீட்டப்பட்டிருந்த போதிலும், அது நிறைவேறுவதற்கு வழி பிறக்காமலே போய்விட்டது.