பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

143


என்பதனாலும், இலக்கியப் பத்திரிகைக்கு அந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று புதுமைப்பித்தன் வேடிக்கை விளக்கமும் கொடுத்தார்.

அவர் சொந்தமாகப் பத்திரிகை எதுவும் நடத்தவில்லை. அவர் தேர்ந்து சொன்ன பெயர் பிற்காலத்தில் கவிஞர் நா. காமராசனுக்குக் கைகொடுத்தது.

கவிஞர் கண்ணதாசன் 'கண்ணதாசன்' என்ற பெயரில் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்தினார். அது பெரிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்ற ஒரு பத்திரிகை ஆகும். அதிகமான பக்கங்கள். பக்கத்துக்குப் பக்கம் ஓவியர் அமுதோனின் தனி ரகமான சித்திர வேலைப்பாடுகள் பெற்றுத் திகழ்ந்த 'கண்ணதாசன்' மாத இதழ் நல்ல தரமான இலக்கிய ஏடு ஆக வந்துகொண்டிருந்தது. இளைய எழுத்தாளர்கள், புதிய கவிஞர்கள் வளர்வதற்குத் துணை புரிந்தது. நல்ல விஷயங்களை நிறையவே கொடுத்தது. கண்ணதாசனும் அதில் அதிகமாகவே எழுதிக் கொண்டிருந்தார்.

வாசகர்களின், எழுத்தாளர்களின் நல்லாதரவைப் பெற்றிருந்த ‘கண்ணதாசன்' மாசிகை கவிஞரின் கோளாறான போக்குகளினால் செத்தது. திரும்பவும் தலையெடுப்பதும் மீண்டும் அவரது குறுக்கீட்டினால் மறைவதுமாக இருந்தது.

‘கவியரசு' என்று விளம்பரப்படுத்திக் கொண்ட கண்ணதாசன் பாதையிலேயே சென்று முன்னேற ஆசைப்பட்ட நா. காமராசன் தானும் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த முன்வந்தார். அதற்கு, புதுமைப்பித்தன் கூறிய பெயரான 'சோதனை' என்பதைச் சூட்டினார். ஆசிரியர் கவியரசு நா. காமராசன் M. A. என்று விளம்பரப்படுத்திக் கொண்டார். கண்ணதாசன் பக்கங்கள் என்று அந்தக் கவிஞர் பல தலைப்புகளில் விதம் விதமாக எழுதியதுபோலவே இந்தக் கவிஞரும் எழுதினார்.

'சோதனை' முதல் இதழ் ஏப்ரல் 1973- ல் வெளிவந்தது. 'ஆலோசகர் : கி. ராஜநாராயணன்' என்றும் அதில் அச்சிடப்பட்டிருந்தது. தலையங்கம் 'உரைகல்' என்ற பெயரைப் பெற்றிருந்தது.

'படைப்புகளை நான் பார்வையிட்டு இதழுக்கு வடிவம் தந்தேன். நான் வெறும் தொகுப்பாசிரியனாக மட்டும் இருந்து விடாமல் விமர்சகனாக இந்த இதழை உருவாக்கினேன். எனவேதான் இங்கே