பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24. விழிகள்


மதுரை, விழிகள் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற சிறு பத்திரிகையான 'விழிகள்' 1976-ல் தோன்றியது. 'இது தொட்டுக் கொள்ளத் துடிக்கும் வடிவங்கள் மட்டுமல்ல, தூரங்களும் விஸ்தீரண மானவைதான்' என்ற உணர்வுடன் செயல்பட்டது.

சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற இலக்கிய விஷயங்களோடு மட்டுமே 'விழிகள்' தன்னை ஒடுக்கிக் கொண்டதில்லை. நாடகம், தெருக் கூத்து, கலைத் திரைப்படங்கள்; கலாசாரம், கல்வித் தரம் போன்ற பல விஷயங்களிலும் இது அக்கறை கொண்டிருந்தது.

தங்கத் தாமரை பரிசுபெற்ற கன்னடத் திரைப்படம், 'சோமன துடி' பற்றி விரிவான கட்டுரை, அதைத் தயாரித்த பி. வி. காரந்துடன் பேட்டி, காந்தி கிராமத்தில் இராமானுஜம் பொறுப்பில் நடைபெற்ற நாடகப் பயிற்சி முகாம் போன்ற விஷயங்களை விழிகள் பிரசுரித்தது. புது நாடகங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது.

சுந்தரபாண்டியன் என்பவர் ஆசிரியராகவும் வெளியிட்டாளராகவும் செயல்பட்ட இப்பத்திரிகையில் ராமசாமி ( ஆராமுதம்) தான் நிறையவும் தீவிரமாகவும் எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலைகள், கிராமியப் பாடல்கள், மக்கள் கலாச்சாரம், நிஜநாடக இயக்கம் முதலியவற்றில் ஈடுபாடு உடையவர் அவர்.

தற்காலத்திய மக்கள் கலாச்சாரத்தின் தன்மையிலும், தமிழ் மன நிலையிலும் அருவருப்பும் கசப்பும் கொண்டிருந்தனர் 'விழிகள்' வட்டத்தினர். அது 'விழிகள்' எழுத்துக்களில் நன்கு வெளிப்பட்டது.

‘எது சரியானது என்பதைத் தீர்மானிக்கவே விடாதபடி, கொடி தூக்குவதற்கும் கோஷமிடுவதற்கும், சாணி எறிவதற்கும், மேளம் அடிப்பதற்கும் மட்டுமே இந்த மனநிலை மனிதர்களை உருவாக்கியிருக்கிறது’ என்று 'தமிழ் மனநிலை' பற்றியும்,

‘தமிழ் மனநிலை இன்றைய கலாச்சாரத்தின் மொத்தத் தளத்திலும் நடந்துகொண்டிருக்கிற அருவருக்கத்தக்க யதார்த்தம், இந்தச் சிக்காளிக்-