பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


தமது முக்கிய லட்சியமாகக் கொண்டிருந்தார். அதே அளவுக்கு, தமிழ் மறுமலர்ச்சியிலும், இலக்கியம், கலைகள் வளர்ச்சியிலும் அவர் அக்கறை காட்டினார்.

இந்நோக்கங்களைச் செயல்படுத்தும் திட்டத்தோடு அவர் சேர்மா தேவியில் குருகுலம் நிறுவினார். அங்கிருந்துதான் ‘பாலபாரதி‘ வெளி வந்தது. (சேர்மாதேவி என்ற ஊரின் சரியான பெயர் ‘சேரன்மாதேவி‘ ஆகும் ).

“தனது இணையற்ற பேராற்றல் குலைந்து போயிருக்கும் தமிழுக்கு அதன் இயற்கையான முதன்மை ஸ்தானத்தைத் தந்து, புராதனக் கலைகளைப் போலவே இக்காலத்துக் கலைகளுக்கும் அதைப் பெரியதோர் நிலையமாக ஆக்க வேண்டுமென்பதும், மக்களுக்குப் பூரணமான கல்வி-அதாவது, இலக்கியக் கல்வியோடு விசுவ கர்ம கலைகளும் கற்பிக்க வேண்டுமென்பதுமே. அந்நோக்கத்திற்கேற்ப, இப்பத்திரிகையில் சீனத்தினின்று பெருதேசம் வரையிலுள்ள சகல நாடுகளிலும் பூத்த இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த முயலுவோம். புதிய கதைகளையும், உயர்ந்த பாஷாந்திரங்களையும் கலாப்பிரியர் ஆனந்திக்கும்படி இப்பத்திரிகை தாங்கி நிற்கும் ” என்று ஐயர் அறிவித் துள்ளார். பழைய இலக்கியங்களில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இப்பத்திரிகைகள் எல்லாம் சிலகாலமே வெளிவந்தன. பரவலான விநியோகம் பெற்றிருக்கவுமில்லை. எனினும், எந்த நோக்கத்துக்காக அவை தோன்றினவோ, அதை இறுதிவரை செயல்படுத்தி வாழ்ந்தன.

இப்பத்திரிகைகளின் ஒன்றிரு இதழ்கூட இப்போது யாரிடமாவது இருக்குமா என்பது சந்தேகம்தான்.

‘விவேக சிந்தாமணி‘ இதழை நான் பார்த்ததில்லை. ‘பஞ்சாமிர்தம்‘ பத்திரிகையின் ஒன்றிரு இதழ்களையும் ‘பால பாரதியின்‘ இதழ்கள் பலவற்றையும் பார்க்கவும் படிக்கவும் எனக்கு 1936-ல் வாய்ப்பு கிட்டியது.

பாலபாரதி இலக்கியத் தரமான பத்திரிகையாக இருந்தது. கதை, இலக்கியம் பற்றிய கட்டுரைகள் என்று பல்வேறு விஷயங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

அடுத்து ‘சுதந்திரச் சங்கு‘ என்ற பத்திரிகையைக் குறிப்பிட வேண்டும். சங்கு சுப்பிரமணியன் அதன் ஆசிரியர். 1930களின் ஆரம்ப வருடங்களில், காலணா விலையுள்ள வாரப் பத்திரிகையாக அது வளர்ந்தது.