பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

வல்லிக்கண்ணன்


எழுதிய 'ஷோலக்கோவ்-ஒரு கம்யூனிஸ்ட் எழுத்தாளர்' என்ற கட்டுரை; 'இளவேனில்' கவிதா என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரையின் பகுதி-இவை முதல் இதழின் விஷயங்கள்.

இவ்விதமே தரமான விஷயங்களுடன் மாதந்தோறும் வெளிவந்தது 'சிகரம்.'

என். ஆர். தாசன், ம. ந. ராமசாமி, சி. ஆர். ரவீந்திரன், பா. செயப்பிரகாசம், மேலாண்மை செ. பொன்னுசாமி ஆகியோர் அவ்வப்போது கதைகள் எழுதினார்கள்.

ம. ந. ரா. எழுதிய சில கதைகள் காரசாரமான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் எழுப்பியுள்ளன.

தணிகைச்செல்வன், தமிழன்பன், உதயை மு. வீரையன், கொ. மா. கோதண்டம், முத்துராமலிங்கம், ப.வேலுசாமி முதலியோர் கவிதைகள் அடிக்கடி வந்தன.

பிற மொழிக் கவிதைகளைத் தமிழாக்கி வெளியிடுவதிலும் 'சிகரம்' ஆர்வம் காட்டியது.

நஸ்ருல் இஸ்லாமின் வங்கக் கவிதைகள் மற்றும் சீனக் கவிதைகள், வியத்நாம் கவிதைகள் சில முதல் வருட இதழ்களில் வந்துள்ளன.

ஒரியக் கதை, வங்காளிக் கதை மொழிபெயர்ப்புகளும் பிரசுரம் பெற்றன.

‘சிகரம்' பேட்டிகளில் கவனம் செலுத்தியது. முதலாவதாக 'வி. பி. சிந்தனுடன் ஒரு பேட்டி' வந்தது.

‘வாழ்க்கையின் உண்மையான படப்பிடிப்பு மட்டும் ஒரு சிறப்புக்குரிய இலக்கியப் படைப்பாக நான் கருதவில்லை. சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளில் அவர்களின் பொருளாதார நலன்களால் உந்தித் தள்ளப்பட்டு பரஸ்பரம் மோதியும் அடக்கியும் எதிர்த்தும் எதிர்நீச்சலடித்தும் நடத்துகின்ற வர்க்கப் போராட்டத்தையும், அதன் விளைவாக சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களையும் கோடிட்டுக் காட்டுகிற படைப்பே சிறந்த இலக்கியமாகும்' என்று சிந்தன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் கட்டுரைகளை ‘சிகரம்' அவ்வப்போது பிரசுரித்தது. உதாரணமாக 'முற்போக்குச் சமுதாய மாற்றங்கட்கு கலையும் இலக்கியமும் ஓர் ஆயுதமே' -ஈ. எம். எஸ். எழுதியது. 'களத்தில் நாம்' -டி. செல்வராஜ்.