பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

வல்லிக்கண்ணன்


‘பாரதியார் பற்றி அசட்டுத்தனமான அல்லது ஈவிரக்கமற்ற த்வனியில் விமர்சிக்கிறேன் என்கிறார்கள். இந்தத் தாக்குதல் இந்த நேரத்தில் அவசியமானதென்று நான் கருதுகிறேன். பாரதி என்கிற மனிதனை நாம் இழந்துவிட விரும்பவில்லை. ஆனால் பாரதி என்கிற கவிஞன் ஒரு சித்தாந்தவாதி. அவனுடைய சித்தாந்தம் கம்யூனிசத்துக்கெதிரான நோய்க் கிருமி. இந்த விஷக்கிருமியை நாம் எப்படி விழுங்கிக் கொள்ள முடியும்?

பாட்டாளி வர்க்க இலக்கியத்தை உருவாக்க வேண்டுமென்றால், பழைய இலக்கியங்கள் அனைத்தையும் மோதியே தீரவேண்டும். மலத்திலே நெல் கிடப்பது மாதிரி பழைய இலக்கியங்களில் சில முற்போக்குக் கருத்துக்கள் இருக்கலாம். அதற்காக மலக் குழிகளை அளைந்து கொண்டிருப்பது அபத்தமான காரியம். நாம் இந்தக் குழிகள் மேடுகளை யெல்லாம் பரம்படிப்போம். பரம்படிக்கப்பட்ட அந்தக் கம்யூனிஸ் நிலத்தில் நெற்கதிர்களை மலைமலையாய் அறுவடை செய்வோம்.’

'இப்படி முழுக்க முழுக்க வர்க்கத் தன்மையும் மார்க்ஸியப் பார்வையும் கொண்ட போக்குடன் இளவேனில் 'கார்க்கி' யை நடத்தினார். சிரமங்களோடுதான். அடிக்கடி பத்திரிகை வராமலே போனது.

நீண்ட ஒரு இடைக்காலத்துக்குப் பிறகு, 'கார்க்கி' யின் அளவைச் சுருக்கி, ஒவ்வொரு மாதமும் ஒரு தனி விஷயத்தைக் கொண்ட சிறு வெளியீடு ஆகப் பிரசுரிக்க முனைந்தார் அவர். இதை 'கார்க்கியின் தொடர் வெளியீட்டியக்கம்' என்று அறிவித்தார்.

‘இது பத்திரிகையல்ல. ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றியதாக இருக்கும். இந்த இதழ் நெருடாவைப் பற்றிய சிறு அறிமுகம். அடுத்த இதழ் மார்க்ஸ் என்னும் இலக்கியவாதி. அப்புறம் ஷேக்ஸ்பியர், பிரெஞ்சுப் புரட்சியும் இலக்கியமும் என்று இது மாதிரி தொடரும்' என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆசை நிறைந்த திட்டமும் பூரணமாக வெற்றி பெறவில்லை.

1981-ல் மீண்டும் 'கார்க்கி' புதிய வடிவத்தோடும் புது வேகத்தோடும் தலைகாட்டியது. இலக்கியம், அரசியல் ஆகியவற்றுடன் சினிமா, நாடகம் ஆகியவற்றிலும் அக்கறை செலுத்த முனைந்தது. இத்தன்மையிலும் அது தொடர்ந்து வர இயலாது போயிற்று. பிறகும், கார்க்கி அவ்வப்போது வெளிவருவதும், சில இதழ்களோடு நின்று போவதும்