பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வல்லிக்கண்ணன்


அந்தக் காலகட்டத்தில்தான் ‘மணிக்கொடி‘ என்ற வார இதழும் தோன்றியது. 1933 செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த வார ஏடு ‘மணிக்கொடி’ அரசியல் பத்திரிகையாகத்தான் செயலாற்றியது. ஆரம்பத்தில் கே. சினிவாசன், வ. ரா. டி. எஸ். சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அது இயங்கியது.

வார இதழின் ஆரம்பகாலத்தில் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. வ. ரா, டி. எஸ். சொக்கலிங்கம், சீனிவாசன் கட்டுரைகள் புதுமையாகவும் சிந்தனை வேகத்துடனும் அமைந்தன. தமிழில் புது முயற்சியான நடைச்சித்திரம் என்பதை வ. ரா. இதில் தொடர்ந்து எழுதினார்.

வாழ்க்கையில் காணப்படுகிற பல தொழில்துறை நபர்களையும் பற்றிய விவரணைச் சித்திரங்கள் இவை. அங்காடிக் கூடைக்காரி, மார்க்கட் மாணிக்கம், காவல் காத்தான், கான்ஸ்டபிள் சுப்பையா, தரகர், ஓட்டல் சிப்பந்தி என்று பலரையும் பற்றிய சுவாரஸ்யமான சொல்லோவியங்கள். இவை பின்னர் நடைச்சித்திரம் என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டன. அப்புறம், பல வருஷங்களுக்குப் பிறகு, இவைதான் ‘வாழ்க்கைச் சித்திரம்‘ என்று மறுபதிப்பாகப் பிரசுரம் பெற்றுள்ளன.

சிட்டி, ந. ராமரத்னம், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி முதலியோர் முதலில் கட்டுரைகளே எழுதினார்கள். கால ஓட்டத்தில் ‘மணிக்கொடி‘ வார ஏடும் சிறுகதைகளுக்கு இடம்தர முன்வந்தது.

பின்னர், பத்திரிகையின் கூட்டுப் பொறுப்பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் ‘மணிக்கொடி‘ நிற்க நேரிட்டது. “மணிக்கொடி என்ற இலட்சியக் கூடாரம் மன வேறுபாடு என்ற பெருங்காற்றினாலே டேராத் துணி காற்றோடு போக, முளைகளும் பிய்த்துக்கொண்டன” என்று கே. சீனிவாசன் சொன்னதாக, பி. எஸ். ராமையா ‘மணிக்கொடி காலம்‘ கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். -

அதன் பிறகு 1935 மார்ச் முதல்- பி. எஸ். ராமைய்யாவின் பெரும் முயற்சியால், மணிக்கொடி கதைப் பத்திரிகையாக வெளிவந்தது. சாதனைகள் புரிந்த அதன் வளர்ச்சி தனி வரலாறு ஆகும்.