பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180


ஒரு கலைப் படைப்பினையும், நிகழ்வினையும் எதிர்கொள்ளும்போது நாம் பெறும் அனுபவங்கள் மனத்தளவில் தங்கிவிடாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்போதுதான் அது ஒரு சம்பாஷணையாக பரிமாணம் கொள்கிறது. இத்தகைய சம்பாஷணைகள் நடந்தால்தான் புதிய கண்ணில் படாத பிராந்தியங்கள், பரிமாணங்கள், ஆழங்கள், உக்கிரங்கள் எல்லாம் வெளிப்பட முடியும். பாலச்சந்தரின் வீணைக் கச்சேரியை எதிர்கொள்ள நேர்ந்த முத்துசாமியின் அனுபவங்கள் வெளிப்படும்போது சங்கீதத்தின் மூலம் ஏற்படும் கலைஞனின் தேடலும், அதன் மூலம் மனித மனம் கொள்ளும் விரிவும் புரிந்து கொள்ளப்படும்.’ { யாத்ரா—30 ).

ஆயினும் 'பதிவுகள்' யாத்ராவில் அடிக்கடி இடம் பெறவில்லை. அப்படி வெளியிடுவதற்கு சக யாத்ரீகர்கள் முன்வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இது குறித்து, யாத்ரா மற்றொரு சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டிய கருத்து கவனத்துக்கு உரியது. சிறு பத்திரிகைகளும் வாசகர்களும் நினைவில் நிறுத்த வேண்டிய முக்கியமான கருத்தும்கூட.

'தற்போதைய தமிழ்ச் சூழலில் ஒரு கலாசார விழிப்புணர்வுக்குச் சிறுபத்திரிகை இயக்கம் எந்த அளவு தேவை என்பதைக் கருத்தில் கொண்டே நாங்கள் பலவித சிரமங்களுக்கு இடையிலும் யாத்ராவை நடத்துவதில் ஒரு விடாப்பிடியான தீவிரத்தைக் கொண்டிருக்கிறோம். இதில் எங்களுடைய தீவிரம் மட்டும் போதாது. இவ்வியக்கத்தில் பங்கு கொள்ளும் உங்களிடமிருந்தும் ஒரு பொறுப்புணர்வை யாத்ரா வேண்டுகிறது. இப்பொறுப்புணர்வின் ஒரு அம்சம் யாத்ராவிற்கு சந்தா அனுப்புவதும் ஆகும். ஒரு சிறு பத்திரிகையை நடத்தும் சிரமத்தை ஒரு சிலர் மட்டுமே தாங்கக் கூடுமா என்பதை நீங்களே நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் சிறு பத்திரிகை ஒன்றோடு சம்பந்தம் கொள்வது என்பது வெறுமனே அதனை வாசிப்பதோடு மட்டும் நின்று விடக்கூடாது. அப்பத்திரிகை தொடர்ந்து வெளிவரத் தங்களால் ஆன உதவிகளையும் செய்யக்கூடிய பொறுப்புணர்வு நமக்கு வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

இந்தச் சமயத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். யாத்ரா மாதிரியான சிறு பத்திரிகைகள் அக்கறை கொள்ளும் இலக்கியம், ஓவியம், தியேட்டர் போன்ற துறைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் இச் சிறு பத்திரிகைகளிடம் காட்டும் அலட்சியம். சிறு பத்திரிகை இயக்கம்