பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

181


வெறுமனே எழுத்து, இலக்கியம் என்றில்லாமல் தன்னுடைய இயக்கக்களனை மற்ற கலாச்சாரங்களுக்கும் விரித்து ஒரு சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் சமயத்தில், இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் சிறு பத்திரிகைகளிடம் காட்டும் அலட்சியம் எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அதே சமயத்தில் இக்கலாச்சாரத் துறைகளின் பாதிப்பினால் விழிப்புணர்வு பெற்ற பலர் சிறு பத்திரிகை இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்து இதனோடு தங்களை இணைத்துக்கொள்ள முன் வருவது எங்கள் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை. எங்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கும் விஷயமும் கூட

மிகுந்த ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டிய சூழல் இது ஒரு கலாச்சாரத் துறையில் ஏற்படும் வளர்ச்சி என்பது ஒரு பொறியாக மாறி மற்ற கலாச்சாரத் துறைகளையும் பாதிக்கவேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நான் ஒரு ஓவியன், நான் ஒரு தியேட்டர்காரன், எனக்குச் சிறு பத்திரிகை பற்றி அக்கறை தேவையில்லை என்று யாராவது நினைப்பார்களேயானால் அவர்களின் கலாச்சார அக்கறை பற்றி நாம் சந்தேகம் கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் இன்றைய சிறு பத்திரிகை இயக்கம் தன்னுடைய இயக்கக் களனை விரித்து மற்ற கலாச்சார துறைகளோடும் சம்பந்தம் கொண்ட ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் அனைவரும் பங்கு கொண்டு பேணிப் பாதுகாக்க வேண்டிய ஒரு இயக்கம் சிறு பத்திரிகை இயக்கம் என்பதை நாம் உணர வேண்டும். சக யாத்ரீகர்கள் அனைவருக்கும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் இது. (யாத்ரா—27).

சிறு பத்திரிகை மூலம் சாதனைகள் புரிந்து காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் நடத்துகிற ஏடுகள் மிகுந்த சிரமங்களோடுதான் உலாவ வேண்டியிருக்கிறது. இவை குறிப்பிட்ட கால எல்லையில் தேதி தவறாது வெளிவர முடிவதில்லை. சிறிது காலம் ஒழுங்காக இதழ்கள் வெளிவந்தாலும் போகப் போக, காலம் தவறுவது இவற்றின் இயல்பாகி விடுகிறது.

சில சிற்றேடுகள் நெடுங்காலம் பிரசுரமாகாமல் இருப்பதும், அவை நின்றுவிட்டன போலும் என நினைத்துக் கொண்டிருக்கிற போது திடீரென ஒரு இதழ் வருவதும், புதிய திட்டங்களை அறிவிப்பதும் சிறு பத்திரிகை உலக நியதியாகவே இருந்து வருகிறது.

‘யாத்ரா' பத்திரிகையும் இந்த நியதியைத் தவறவிடவில்லை. காலம் தவறி வந்து கொண்டிருந்த யாத்ரா 1983-ல் பல மாதங்கள் பிரசுரம்