பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

183


இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் ஏதும் தவறில்லையே. ஆனால் இன்றைய தமிழ்ச் சூழலில் அது தவறுதான் போலும், நாலரைக் கோடித் தமிழர்கள் இருக்கிறார்களாம் இங்கு. அதில் 200 பேர்தான் யாத்ராவை வாங்கிப் படிக்கிறார்கள். இந்த 200 பேர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறவர்களாக இருந்தாலே போதும் இவர்கள் தங்களைச் சுற்றிலும் பாதிப்புகளை உண்டாக்குவார்கள். இப்பாதிப்பு அலை அலையாகப் பரவும் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறோம். எந்தவொரு கலாச்சார முயற்சியும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை- ஆதரவை நம்பி ஆரம்பிக்கப்படுவதில்லை. மாற்றத்தை விரும்பும் பிரக்ஞையுள்ள நபர்கள் சிலரின் முயற்சியாலும், அதே மாதிரியான கொள்கைப் போக்குள்ளவர்களின் பங்கு பெறுதலாலும்தான் கலாச்சார முயற்சிகள் வளர்ச்சி பெறமுடியும். இலக்கியப் பத்திரிகை ஒன்றினை நடத்திக் கொண்டிருப்பதும் கலாச்சார முயற்சிதான் என்று நாங்கள் நம்புகிறோம். இம் முயற்சியில் ‘சக யாத்திரிகர்கள்' என்று நாங்கள் அழைக்கும் உங்கள் பொறுப்பை நீங்கள் உணரவேண்டும்.’

'யாத்ரா’ வின் முகவரி : யாத்ரா, பண்ணை மூன்றடைப்பு, திருச்சுழி போஸ்ட், ராமநாதபுரம் மாவட்டம்.