பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31. இலக்கிய வெளிவட்டம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் தோன்றிய மற்றொரு தனித்துவமான சிறு பத்திரிகை 'இலக்கிய வெளிவட்டம்' ஆகும்.

சமூக நோக்கும் மார்க்ஸிய உணர்வும் கொண்ட தீவிரவாதப் பத்திரிகை இது. மார்க்ஸியத்தைப் பரந்த அடிப்படையில் ஏற்றுக் கொண்டவர்கள் இ. வெ. வட்டத்தில் எழுதினார்கள்.

‘மார்க்ஸியம் என்பது மார்க்ஸ், ஏங்கல்ஸ் சொன்னவை மட்டுமின்றி, பின்வந்த காலகட்டங்களில், உலகம் பூராவும் தோன்றிய அந்தந்தப் பகுதியின் விசேஷத் தன்மைக்கு ஏற்ப மார்க்ஸிய ஆய்வுகளால் செழுமை சேர்த்த லெனின், ஸ்டாலின், மாவோ, கிராம்சி அல்துஸ்ஸர் போன்ற இவர்களின் படைப்புகளும் சேர்ந்தே மார்க்சியம் எனப்படுகிறது' என்று இ. வெ. வ. விளக்கம் தந்துள்ளது.

1976—ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காலாண்டு ஏடு பலதரப்பட்ட விஷயங்களிலும் அக்கறை காட்டியது. இலக்கிய விவாதத்தில் ஆர்வம் கொண்டிருந்தது. பலவித அபிப்பிராயங்களை உடைய எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் தனது பணியில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

‘பத்திரிகை, படைப்பாளிகள், வாசக விமர்சனங்கள்—இந்த அடிப்படையிலான கூட்டுறவு பங்கப்படாமல் வளரும் போதே அறிவார்ந்த சூழல் என்பது விஸ்தாரமடைய முடியும். எங்களுக்கு எல்லாந் தெரியுமாக்கும் என்று நாங்கள் எப்போதும் முதுகைத் திருப்பிக்கொண்டு நின்றதில்லை. இ. வெ. வ.திட்டமிட்டு யாரையும் புறமொதுக்கியதில்லை. சுகவீனமற்ற எக்கருத்தையும் விவாதத்துக்கு ஏற்கத் தயக்கமில்லை என்று அது அறிவித்தது.

சிறு பத்திரிகை நடத்த முற்படுகிறவர்களில் அநேகர் பரபரப்பு ஊட்டுவதற்காகவும், எளிதில் கவனத்தைக் கவர்வதற்காகவும் தாங்கள் ‘விஷயம் தெரிந்தவர்கள்' என்று காட்டிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையினாலும் தடாலடி விமர்சனங்கள், தாக்குதல்கள், சாதனைகள் புரிந்துள்ள முன்னோடிகளின் நற்பணிகளைக் கவனிப்புக்குக் கொண்டு வராமலே அவர்களது சில பலவீனங்களையும் குறைபாடுகளையும் மட்டுமே