பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32. வாசகன்


பிரமாதமாக எதையும் சாதிக்க இயலாது போயினும் புதுமையாக ஏதாவது செய்துகாட்ட வேண்டும் என்ற துடிப்பு இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. கலை, இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களாக இருந்தால் அவர்கள்-தனித்தனியாகவோ, சிலராகச் சேர்ந்தோசிறு பத்திரிகை ஒன்றை நடத்த முற்படுகிறார்கள். .

அப்படி ஒரு உந்துதலின் பேரில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான் 'வாசகன்'. அதை பத்திரிகை என்றுகூட அவர்கள் சொல்ல விரும்பவில்லை. ஒரு தமிழ் இலக்கிய வரிசை ('எ டமில் லிட்டரரி ஸிரீஸ்’) என்று அறிவித்துக் கொண்டார்கள்.

‘மெட்ராஸ் யூத் ஃபோரம்' என்ற அமைப்பின் வெளியீடு ஆக வந்த 'வாசகன்' மாலன், அக்ரிஷ் இருவரையும் ஆசிரியர்களாகக் கொண்டிருந்தது.

‘சும்மா நடக்கவே' வாசகன் வெளிவருவதாக அதன் ஆசிரிய அறிவிப்பு கூறியது. ஏழாவது இதழில் பிரசுரமான அந்த அறிவிப்புபுதுமையானது—உண்மைகளை எடுத்துக் காட்டுவது. அது பின்வருமாறு:

'ஒரு செப்டம்பர் பிற்பொழுதில் வாசகன் வெளியாயிற்று.

கால இயக்கத்தோடு ஏதும் ஒப்பந்தங்கள் அற்று. எதையும் ஸ்தாபிக்க அல்ல. இயங்க. -

காலப் பிரக்ஞையும், ஸ்தாபனங்களும்தான் எதிரி, கலைக்கும் படைப்பாளிக்கும்.

காலத்தின் துரித நடையுடன் ஓடி ஓடி நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலக்கியச் சிற்றேடுகள் தங்கள் பாதை பிறழ்ந்தவாறு இழுபட்டுப் போகின்றன.

ஒரு படைப்பாளியின் கூர்மைகள் ஸ்தாபனம் சீராக இயங்க வேண்டிய நிர்வாகக் காரணங்களில் சிதறிப் போகின்றன.

ஸ்தாபனமாகிப் போகும் இயக்கத்தில் தமிழ்ச் சிற்றேடுகள் எல்லாம் ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பலி கொடுத்திருக்கின்றன.