பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

வல்லிக்கண்ணன்


1975 செப்டம்பர் மாதம் பிறந்தது புதிய வானம் ஒரு இன்பமான இயக்கப் பூர்வமான கூட்டு முயற்சியின் விளைவாக நன்கு வளர்ந்து வந்த புதிய வானம், சக்திகளை ஒருமுகப்படுத்தி, மக்கள் இலக்கியப் பாதை நோக்கி உறுதியுடன் அடியெடுத்து வைக்கும் கடமை உணர்ச்சியோடு செயல்பட்டது.

1977 ஜனவரி இதழை (14) ஜீவா மலர் ஆகவும், அக்டோபர் இதழை (16) பாரதி மலராகவும் வெளியிட்டது.

இடையில் ஏற்பட்ட தேக்கம் 16-ம் இதழுக்குப் பிறகு நீண்ட காலத் தேக்கமாக மூன்று வருடங்கள் நீடித்திருக்கிறது. மீண்டும் 1980 அக்டோபரில்தான் 17-ம் இதழ் பிரசுரம் பெற்றுள்ளது.

ஆசிரியக் குழுவில் சில பெயர் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அந்த இதழின் ஆசிரியக் குறிப்பு இது

‘மூன்று ஆண்டுகளுக்கு முன்—

இந்திய வானில் சில பாழ் மேகங்கள் சூழ்ந்த இருட்டுப் பொழுதில் புதிய வானம் கண்ணுக்குத் தெரியாமல் போகவேண்டியதாயிற்று. அந்தச் சூழ்நிலைகளை இப்போது ஆராயத் தேவையில்லை என நினைக்கிறோம்.

மீண்டும் புதிய வானம் ஒரு விடியலின் வெளிச்சக் கீற்றை நோக்கித் தன் ஆர்வப் பயணத்தைத் தொடங்குகிறது.

இந்த மூன்று ஆண்டு இடைவெளியில் நமது குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வளர்ச்சி பெருமிதத்திற்குரியது. மூன்று ஆண்டுகளுக்கு முன் மூன்று கிளைகள். இன்று ஏழு கிளைகளும் அதனை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் மைய அமைப்புமாகத் தன் செயல்பாடுகளை விரிவுபடுத்தி இருப்பதோடு, கூர்மைப்படுத்தவும் செய்து கொண்டிருக்கிறது.

மனிதாபிமான படைப்பாளிகள் நம் மன்றத்தில் பல்கிப் பெருகிய நிலை கிளைகள்தோறும் கையெழுத்து ஏடுகள் அவர்களின் புயல் கருக் கொண்ட மேகங்களைத் தாங்கிக் கொள்ள அந்தக் கையெழுத்து ஏடுகள் மட்டும் போதாது; புதிய வானம் மீண்டும் வந்தே தீர வேண்டும் என்ற நிலை.

பொருளாதார நெருக்கடிகளை உள்ளடக்கிக் கொண்டு புதிய வானம் இரு மாதத்திற்கொருமுறை கொண்டுவர எண்ணியுள்ளோம்.