பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



34. மகாநதி


'சோஷலிஸ்டு எதார்த்தவாதம் உண்மையான நிலைக்கண்ணாடியைப் போல, வாழ்க்கையை மானசீகமாக அல்ல, தூலமாகக் காட்டுகிறது. வாழ்க்கையைச் சரித்திர பூர்வமாக உருவாகி வரும் சமுதாய அமைப்பிலும் அதன் பல்வேறு புரட்சிகரமான வளர்ச்சிகளிலும் காட்டுகிறது. சோஷலிஸ்டு எதார்த்தவாதம் மனித வர்க்கம் முழுமைக்கும் மனித வாழ்வின் சகல துறைகளிலும் சோஷலிச உணர்வுடன் பயிற்சி அளிக்கிறது.'

ப. ஜீவானந்தம் வலியுறுத்திய இக்கருத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் நடந்தது 'மகாநதி', மதுரையிலிருந்து வெளிவந்த 'இருமாதம் ஒரு முறை' கலை இலக்கிய வெளியீடு இது. 1970 களின் இறுதிக் கட்டத்தில் பிரசுரமான இந்த முற்போக்கு இதழின் ஆசிரியர் பரிணாமன். மதுரையில் உள்ள முற்போக்கு இலக்கியவாதிகள் குழுவாகச் செயல்பட்டு, மகாநதியை ஒரு தரமான இலக்கியப் பத்திரிகையாக உருவாக்கி வந்தார்கள்.

'தமிழ் இலக்கியத்தில் முற்போக்குத் திசைவழியில் பார்க்கவும் படைக்கவும் நமக்குக் கற்றுக் கொடுத்தவர் ஜீவா. இலக்கியத்திலும் நல்லது, நசிவு என்று பிரித்துப் பார்க்கவும், நல்லது, மக்கள் இலக்கியமாக, மகா நம்பிக்கைவாதக் கண்ணோட்டத்தைப் பெறவும் நமக்குக் கிடைத்த ஆதர்சம். ஜீவாவிடம் நாம் பெற்ற சொத்து. ஜீவாவிடம் பெற்ற ஜீவதாகங்கள் ஆங்காங்கே வேரூன்றி மரமாகி, காய்த்துக் கனிந்து, மீண்டும் விதை பரப்பும் பக்குவம் பெற்றிருப்பது மறைக்க முடியாத உண்மை. மகாநதியின் தோற்றத்திற்கு அதுதான் காரணம்.'

இப்படி நன்றி உணர்வோடு ஆசிரியர் குழுவினர் ஓராண்டு நிறைவுற்றதும் அறிவித்தார்கள். மேலும் பெருமையோடும் திருப்தியோடும் அவர்கள் தெரிவித்திருப்பது இது—

‘மத்தியதர வர்க்கத்தினருடன் கூடவே உழைக்கும் மக்கள் மத்தியிலும் அழகியல் உணர்வுடன் படைக்கும் ஆற்றல் பெற்ற படைப்பாளிகள் வளர்ந்துவிட்டதும் உழைப்பாளி மக்களிடமிருந்து புறப்படும் எழுத்தாளர்களை இரண்டாம் தரமாக நோக்க முடியாத நிலையும் முற்போக்கு இலக்கிய இயக்கம் பெற்ற வெற்றி. இந்த வெற்றியைப் பரந்த அளவில்