பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

197


மேலும் கொண்டு செல்வது, அளவிடற்கரிய பணியானாலும், அதில் ஒரு சில துளிகளை மகாநதி தனது ஆறு இதழ்களில் நிறைவேற்றியிருக்கிறது என்று பெருமைப்படுகிறது. எத்தனை அம்சங்கள் என்று பார்ப்பதை விட, எப்படிப்பட்ட அம்சங்கள் அரங்கேறி இருக்கின்றன என்று பார்த்தால் இப்பெருமை துலாம்பரமாகும்.’

இது நியாயமான பெருமையே ஆகும். மகாநதி தரமான சிறுகதைகளையும், பயன் நிறைந்த சிந்தனைக் கட்டுரைகளையும் பிரசுரித்துள்ளது.

சமுதாயப் பார்வையுடன் அழகியல் உணர்வும் கொண்ட தன்மையில், ரசனைக்கு உரிய நல்ல கதைகளை சகுந்தலை என்ற பெயரில் எழுதியவர் படைத்திருக்கிறார். 'சூழலூதி வருவான் குமிந்தன்', 'தேவனே தேவனே', 'ஜென்மபூமி' ஆகியவை குறிப்பிடப்பட வேண்டியவை.

மற்றும், கொ. மா. கோதண்டம் எழுதிய 'மலைக்காட்டிடையே ஒரு மாட்டுக் கிடை'. பெரிய தனக்காரர்களின் மாடுகளை மலைமீது பாதுகாத்து வளர்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை விரிவாக வர்ணிக்கும் கதை, இராகுலதாசனின் தாய் போன்ற நல்ல கதைகளை மகாநதி வெளியிட்டிருக்கிறது.

கட்டுரைகள் விஷயத்தில் மகாநதி மிகுந்த அக்கறை காட்டி, பல் முக்கியமான பிரச்னைகளை அலசியிருக்கிறது. வட்டார இலக்கியம் சம்பந்தமான ஆய்வுகள் குறிப்பிடத்தகுந்தவை.

‘வட்டார இலக்கியம் எனும் பாகுபாடு' என்ற தலைப்பில் தி. சு. நடராசன் எழுதியதும், 'படைப்பிலக்கியத்தில் வட்டார வழக்கும் கிராமமும் நமது தேசிய ஜனநாயக மரபும்' என்ற நவபாரதி கட்டுரையும் தற்கால இலக்கிய முயற்சிகளை அறிமுகம் செய்வதோடு, வட்டார வழக்கின் தன்மைகள் குறித்தும் ஆழமாகச் சிந்தித்துள்ளன. வட்டார வழக்கு, கொச்சை எல்லாம் மொழிவளம், உள்ளடக்கம் என்பதைக் கூர்மைப்படுத்துவதற்குத்தானே ஒழிய, அவற்றை மழுங்கடிக்க அல்ல' என்று நவபாரதி தன் கட்டுரையில் அழுத்தமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கட்டுரை மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டன. மாயகோவ்ஸ்கி கவிதை பற்றிய சோவியத் அறிஞர்கள் பலரின் கருத்துக்கள், காலமும் கலைஞனும் என்ற செக்கோஸ்லாவேகியக் கட்டுரை கமலேசுவரின் இந்திக் கட்டுரைகள், நாவலின் மொழிநடை குறித்து எம். பக்தின் எழுதியது-இவை 'மகாநதி' யில் வந்துள்ளன.