பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

207


ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி குறித்தே சரியான விமர்சனம் கிடையாது. இலக்கியக் கோட்பாடுகள் பற்றி அந்நிய நாட்டு இலக்கியங்களில் எவ்வளவோ விவாதங்கள் நடந்திருக்கின்றன. இங்கு எழுதுகிறவர்களுக்கே இலக்கியக் கோட்பாடுகள் வேண்டுமென்று தோன்றவில்லை (இலக்கியக் கோட்பாடுகளை வைத்துக் கொண்டு எழுதப் போவதில்லை—அது வேறு விஷயம்). தமிழாசிரியர்கள் எழுதி வந்திருப்பவை எவையும் கருத்தில் கொள்ளும்படியாய் இல்லை. தமிழாசிரியராய் இருப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. வெளிநாட்டுப் பேராசிரியர்கள் யாரும் பேராசிரியர் என்கிற தகுதி பற்றி இல்லாது அவர்களுடைய இலக்கியப் பிரக்ஞையாலேயே இலக்கிய உலகில் இடம் பெறுகின்றனர். அவர்களுடைய இலக்கியப் பிரக்ஞையாலேயே அவர்கள் நல்லாசிரியர்களாகவும் இருந்தனர். இலக்கியக் கோட்பாடுகளும் நிர்த்தாட்சண்யமான விமர்சனங்களும் இலக்கிய உலகில் நிறையப் பேருடைய ஸ்தானங்களை நிர்ணயிக்கும். எழுதுவதெல்லாம் இலக்கியம் என்ற சுத்த சமரச சன்மார்க்க அபேதவாதம் மறையும். பொய்யான ஸ்தானங்களையும் அது பற்றிய மயக்கங்களையும் போக்கும். . 'தேடல்' விமர்சனக் கட்டுரைகளை ஓரளவும், சுய படைப்புகளை மிகுதியாகவும் வெளியிட்டுள்ளது. கலாப்ரியா, கல்யாண்ஜி, உமாபதி, விக்ரமாதித்யன் மற்றும் சிலரது கவிதைகள், பூமணி, வண்ணதாசன், ஜோதிவிநாயகம் கதைகள், சுந்தர ராமசாமி, நகுலன் கட்டுரைகள் பிரசுரமாயின. வண்ணநிலவன் ஒரு நாடகமும், கலாப்ரியா கவிதைகள் பற்றி விமர்சனமும் எழுதினார். கூத்தாட்டத்தில் 'பொண் வேஷம்’ என்ற விஷயம் பற்றி ராஜநாராயணன் சுவாரஸ்யமான ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

'தேடல்' 1978-ல் இரண்டு இதழ்களும் 1983-ல் இரண்டு இதழ்க ளும் வந்துள்ளன.