பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



37. விடியல்


‘‘விடியல்‘ விமர்சன நோக்கங்கொண்ட கலை இலக்கிய இதழாக வெளிவரும். விடியல் பிரசுரிக்கும் ஒவ்வொரு எழுத்தும் கடுமையான விமர்சனத்தை எதிர்நோக்கியே அச்சேறுகின்றன.

சுத்த இலக்கியம் படைக்கிறவர்கள், மக்கள் இலக்கியம் என்ற பெயரில் தவறான கண்ணோட்டத்துடன் எழுதுகிறவர்கள் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டால் புரட்சிகர இலக்கியத்தின் இலக்கு தெளிவாகும் என நம்புகிறோம். விடியல் இதைத் தொடர்ந்து செய்ய இருக்கிறது.

தத்துவக் கண்ணோட்டத்துடன் ஒரு விடியலுக்கான பயணத்தை மேற்கொண்டவர்களுக்கு இந்த இதழ் ஒரு கலை இலக்கியப் பாதையை அமைத்துத் தர முயலும். கரண்டலமைப்பைத் தகர்க்கும் வல்லமை பெற்ற புரட்சிகரத் தத்துவத்திற்கு விடியல் கடமைப்பட்டுள்ளது.‘

இவ்வாறு அறிவித்துக் கொண்டு, 1975 ஜனவரியில் ‘விடியல்’ தனது புறப்பாட்டைத் துவக்கியது. மாதப் பத்திரிகையாக சில இதழ்கள் மாசிகையாக வந்த பிறகு, 1976-ல் ‘மாதமிரு முறை‘யாக வளர்ந்தது.

மாத இதழில் இன்குலாப், பரிணாமன், கங்கைகொண்டான் ஆகியோரின் கவிதைகளைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரைகள் பிரசுரமாயின. திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களும் எழுதப்பட்டன. மற்றும் கதைகள், கவிதைகளும் இடம்பெற்றன.

கவிஞர்கள் பற்றிய தீவிரமான விமர்சனங்களை வெளியிடுவதன் காரணத்தையும் ஒரு இதழில் ‘விடியல்‘ குறிப்பிட்டது.

‘ஒரு பக்கம் சீறுவதும், மறு பக்கம் குடை பிடிப்பதுமான போக்கினைக் கவிஞர்கள் கையாண்டால் அவர்களின் படைப்புகள், மண்ணினைக் கிழித்துக் கதிர்களைக் குலுங்கச் செய்யும் கோடிக்கணக்கானோருக்கும், பெருத்த எந்திர ஒலிகளிடையே தங்களது உழைப்பையும் தேய்த்துக் கொள்ளும் லட்சக்கணக்கானோருக்கும் துரோகம் செய்வதற்குத் தான் கைலாகு கொடுக்கும். இதில் நம் கவிஞர்கள் கவனமாய் இருக்க