பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

21


மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்றுவிட்டது என்பது என் கருத்து. மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது ( மணிக்கொடி காலம் ).

‘மணிக்கொடி' வெளிவந்த காலத்தில் இதர பத்திரிகைகளும் சிறு கதைகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தன. வெற்றிகரமாக வளர்ந்து கொண்டிருந்த 'ஆனந்த விகடன்' கதைகளுக்கு அதிக இடம் அளித்தது. கட்டுரைகள், ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த கலைமகள் ஒவ்வொரு இதழிலும் சில கதைகளைப் பிரகரித்தது. நாளிதழ்களும் மற்றுமுள்ள பத்திரிகைகளும் கதைகளுக்கு வரவேற்பு அளித்தன. ஆனாலும், மணிக்கொடி போன்ற தனித்தன்மை உள்ள ஒரு பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.

இது குறித்துப் புதுமைப்பித்தன் ஆண்மை என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்-

‘மணிக்கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய பரிசீலனைகளுக்கு இடம் கொடுக்கும்- உற்சாகம் ஊட்டும் வரவேற்கும்பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடையாது.

‘ஆனந்த விகடன்' மூலம், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இன்பமூட்டும் சிறுகதைகளை- வாழ்க்கையின் மேலோட்டமான அம்சங்களை இனிமையாக, அழகாக, சந்தோஷம் தரும் விதத்தில் சித்திரிக்கும் ஆழமற்ற கதைகளை- பிரபலப்படுத்தி வந்தார். ‘கலைமகள்' மிதவாத நோக்குடன் கதைகளைப் பிரசுரித்து வந்தது.

உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி இடம் அளித்தது.

பிற்காலத்தில் மணிக்கொடி கோஷ்டி என்று இலக்கிய வட்டாரங்களில் குறிப்பிடப்பெறுவது சகஜமாயிற்று. ஆயினும், மணிக்கொடி