பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40. வித்தியாசமான வெளியீடுகள்



சிறு பத்திரிகைகளுள்ளும் வித்தியாசமானவையாக அவ்வப்போது சில பத்திரிகைகள் தோன்றி, தமக்கெனத் தனி நோக்கும் பாதையும் கொண்டு செயல்படுவதும் நடந்து வருகிறது.

பேராசிரியர் நா. வானமாமலை நடத்திய ‘ஆராய்ச்சி‘ அப்படிப்பட்ட ஒரு வெளியீடு ஆகும்.

மார்க்ஸிய தத்துவ அடிப்படையில், சமுதாயப் பார்வையோடும் வரலாற்றுப் பின்னணியோடும் பல பிரச்னைகளையும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர் நா. வானமாமலை, நாட்டுப் பாடல்களை ஆராய்ந்து தொகுத்தவர். சமூக, பொருளாதார, தத்துவ, கலை, இலக்கியம் சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து எழுதுவதாக அவர் நடத்திய ‘ஆராய்ச்சி‘ எனும் காலாண்டு ஏடு தனித் தன்மையோடு, பயனுள்ள விஷயங்களைத் தாங்கி வந்தது.

பேராசிரியர் நா. வானமாமலை, மார்க்ஸிய நோக்குடன் சிந்தித்து ஆராயக்கூடிய திறமை பெற்ற விமர்சகர்கள் குழு ஒன்றை உருவாக்கினார். அவர்கள் எழுதிய கட்டுரைகளும் ‘ஆராய்ச்சி‘யில் வெளிவந்தன.

இலக்கியப் படைப்பாளிகள் சிலரது நாவல்கள், சிறுகதைகள் பற்றிய விமர்சனங்களையும் ‘ஆராய்ச்சி‘ வெளியிட்டது.

அது இலக்கியவாதிகளையும், ரசிகர்களையும் எட்டியதைவிட, சர்வதேச ரீதியில் பல்கலைக்கழகங்களையும் ஆராய்ச்சி மாணவர்களையும் அதிகம் தொட்டது என்று சொல்லலாம்.

‘ஆராய்ச்சி‘ யை நினைவுபடுத்தும் விதத்தில்— ஆனால் முற்றிலும் தனியானதொரு போக்கில்- ‘1/4‘ என்ற காலாண்டு ஏடு 1980-ல் வெளி வந்தது. ஆசிரியர்—மலர்மன்னன்.

‘தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கான இதழ்’ என்று கூறிக்கொண்டு, 15 ரூபாய் விலையில், பெரிய அளவில், 96 பக்கங்களோடு இக் காலாண்டு ஏடு வெளிவந்தது. முதல் இதழ் 1980 ஜூலை-செப்டம்பர் எனத் தேதியிடப் பெற்றிருந்தது. இத்தொகுப்பில் அதன் நோக்கம் குறித்து மலர்மன்னன் விரிவாக எழுதியிருந்தார்.

த-15.