பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

227


தற்கால ஓவியரின் ஓவியம் ஒன்று ஒவ்வொரு முறையும் அட்டைச் சித்திரமாக அச்சிடப்பட்டு, அந்த ஓவியரைப் பற்றிய அறிமுகக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

மலர் மன்னன் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு சிரமத்தோடுதான் ஒவ்வொரு இதழையும் உருவாக்கினார். காலாண்டு ஏடு தரம் உள்ளதாகவே அமைந்திருந்தது. பல்கலைக்கழகங்கள், சர்வதேச அமைப்புகள், கல்லூரிகள் முதலியவற்றோடு நெருங்கிய தொடர்புகொண்டு வளர விரும்பியது இச்சிறு பத்திரிகை.

பாராட்டுக்களும், உற்சாகமூட்டும் ஆதரவும் மலர் மன்னனுக்கு ஓரளவுக்குக் கிடைத்தன. குறை கூறலும், விலை வெகு அதிகம் என்ற விமர்சனமும் அதே அளவுக்கு இருந்தன. பொருளாதார சிரமங்கள் இருக்கவே செய்தன.

ஆகவே, காலாண்டு ஏடு குறிப்பிட்ட காலக் கணக்கின்படி வெளிவரவில்லை. நான்காவது இதழை, பக்கங்கள் குறைத்து (48 பக்கங்கள்), விலையையும் 5 ரூபாய் எனக் குறைத்து வெளியிட வேண்டிய கட்டாயம் மலர்மன்னனுக்கு ஏற்பட்டது.

‘பணத்திற்காக அலைகிற பலவீனம் ஏற்பட்டு, இதழைத் தரமாகக் கொண்டு வருவதில் காட்டும் கவனம் சிதறிப் போகும் என்பதனாலேயே விளம்பரம் சேகரிப்பதில் ஆர்வமற்றிருந்தேன்’ என்று குறிப்பிட்ட அவர் விளம்பரங்கள் வெளியிட்டுப் பணபலம் தேடவேண்டிய அவசியமும் உண்டாயிற்று.

ஆயினும், வளர வேண்டிய இந்தக் காலாண்டு வெளியீடு வாழ முடியாமலே போய்விட்டது.

‘குமரி மலர்‘ என்பது தனித்தன்மையுடன் வெகுகாலம் வந்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அது ஒவ்வொரு மலரிலும் புதிய புதிய கட்டுரைகளையே பிரசுரித்து வந்தது.

இரண்டாவது உலக மகாயுத்தக் காலத்தின்போது, பத்திரிகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலுக்கு வந்தது. புதிதாகப் பத்திரிகைகள் துவங்குவதற்கு அனுமதி வழங்க அரசு மறுத்தது. ஆனால், புத்தகங்கள் வெளியிடலாம் என்ற நிலை இருந்தது.

ஏ. கே. செட்டியார் மாதம் ஒரு புத்தகம் என்று சொல்லி ‘குமரி மலர்‘ என்ற தொகுப்பு வெளியீட்டை ஆரம்பித்தார். கட்டுரைகள், கதை, கவிதைகளின் தொகுப்பு.