பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228


குமரி மலர் காட்டிய வழியில் பலப்பல ‘மலர்‘களும், ‘மாதம் ஒரு புத்தகம்‘ களும் தோன்றின. மறைந்தன. குமரி மலர் தனது போக்கில் அமைதியாகச் சென்றது.

வெகுகாலம் வரை, டி. கே. சி, வ. ரா. சாமிநாத சர்மா போன்ற அறிஞர்கள் எழுதித் தந்த கட்டுரைகளைப் பிரசுரித்தது. பிறகு தன் போக்கை ‘குமரி மலர்‘ மாற்றிக்கொண்டது. காந்திஜியின் மணிமொழிகள், ராஜாஜி விட்டுச் சென்ற பழைய கட்டுரைகள், கடிதங்கள், திரு. வி. க. எழுத்துக்கள் முதலியவற்றைப் பிரசுரிக்கலாயிற்று. ஆனந்தரங்கம் பிள்ளை டயரிக் குறிப்புகள், பார்வைக்கு அகப்படாதிருந்த பழங்காலக் கட்டுரைகள், கடிதங்கள், அபூர்வப் பொருள்களாகிவிட்ட மிகப் பழைய சஞ்சிகைகளில் பிரசுரமான விஷயங்கள்—இப்படி, வாசகர்களுக்கு எளிதில் கிடைக்க முடியாத அபூர்வங்களைத் தேடி எடுத்து அச்சிட்டுத் தந்தது.

சந்தாதார்களுக்கு மட்டுமே என வந்து கொண்டிருந்த ‘குமரி மலர்’ இவ்வகையில் ஒரு நல்ல பணி செய்துள்ளது பலருக்கும் தெரியாது. ஏ. கே. செட்டியார் மரணம் அடைகிறவரை அது தனது வழியில் நிதானமாகச் சேவை புரிந்து வந்தது.

அதேபோல அமைதியாக, பாராட்டப்பட வேண்டிய விதத்தில் தமிழ்ப் பணி புரிந்துவந்த இன்னொரு பத்திரிகை ‘உலக இதய ஒலி‘ ஆகும்.

காந்தியத்தில் மிகுந்த பற்றுதலும் நம்பிக்கையும் கொண்ட சர்வோதயவாதியான டி. டி. திருமலை நடத்திய மாதப் பத்திரிகை இது. ரசிகமணி டி. கே. சி. அவர்களிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர் அவர். இப்பண்புகளை அவருடைய பத்திரிகை வெளிப்படுத்தியது.

காந்திய தத்துவங்களை, சமூக ஒழுக்கம், தனிமனிதப் பண்பாட்டு உயர்வு முதலியவற்றை வலியுறுத்தும் கட்டுரைகளை டி. டி. திருமலை இனிய எளிய நடையில் ரசமாக எழுதி வந்தார். அவற்றுடன் டி. கே. சி. யின் எழுத்துக்களையும், கடிதங்களையும் பிரசுரித்தார். அறிஞர்கள், சிந்தனையாளர்களிடமிருந்து கட்டுரைகள் வாங்கி வெளியிட்டார். இவற்றோடு இன்னுமொரு நல்ல காரியமும் செய்து வந்தார்.

தமிழில் எத்தனையோ நல்ல நூல்கள் பிரசுரமானது உண்டு. அவை முதல் பதிப்போடு மறைந்தே போயின. அவற்றின் சிறப்பை, பின்வந்த ரசிகர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லாமலே போய் விட்டது.