பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

229


அதேபோல, தமிழ்நாட்டில் வெவ்வேறு காலகட்டத்தில் நல்ல பத்திரிகைகள் தோன்றி, பயனுள்ள அரிய விஷயங்களைப் பிரசுரித்து, பின் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்துள்ளன. அவற்றில் பிரசுரமான தரம் நிறைந்த கட்டுரைகளும் நயம் கலந்த கதைகளும் பின்னர் தொகுப்புகளில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறவுமில்லை.

அத்தகைய விஷயங்களை—தற்கால வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுவதை—தேடி எடுத்து மறு பிரசுரம் செய்து தந்தது ‘உலக இதய ஒலி‘.

தரமான அந்தப் பத்திரிகையும் பரந்த வாசக உலகத்தைப் பெற்றதில்லை—பெற முடிந்ததில்லை.

புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கென்றும், மதிப்புரை விமர்சனம் மற்றும் புத்தகங்கள், ஆசிரியர்கள் பற்றிய விஷயங்களை அறிவிப்பதற்காகவும் தனிப் பத்திரிகைகள் தமிழிலும் வெளிவந்தது உண்டு.

புத்தக வெளியீட்டாளர்கள் தங்களுடைய பிரசுரங்கள் பற்றிய தகவல் அறிவிப்புகளுக்காக சிறு பத்திரிகைகள் நடத்தியிருக்கிறார்கள். க. நா. சுப்ரமண்யம் 1940 களில், புத்தகங்கள் பற்றிய விஷயங்களை மட்டுமே வெளியிடும் ’ராமபாணம்’ என்றொரு பத்திரிகை பிரசுரித்தார்.

1960 களில் ’நூலகம்’ என்ற பத்திரிகையைக் கவிஞர் குயிலன் நடத்தினார். பிறகு வாசகர் வட்டம் அதன் பொறுப்பை ஏற்று, தரம் குறையாத மாத இதழாகச் சில காலம் நடத்தி வந்தது.

1983—ல் சிவகங்கை அன்னம் வெளியீட்டுக்காக கவிஞர் மீரா ’அன்னம் விடு தூது’ என்ற வெளியீட்டைத் தயாரித்து வெளியிட்டார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த அச்சிற்றேடு புத்தகங்கள் பற்றிய பயனுள்ள தகவல்களை, மதிப்புரைகளை, விமர்சனக் கட்டுரைகளையும் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களையும் பிரசுரித்தது. ஆறு இதழ்கள் வந்ததற்குப் பிறகு, 1984—ல் ’அன்னம் விடு தூது’ பூரண மாத இதழாக மாற்றப்பட்டுவிட்டது. புத்தக உலகச் செய்திகளைவிட,