பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. மணிக்கொடியின் பிற்காலம்

மணிக்கொடி இலக்கியத் தரத்துடன் சிறுகதைத் துறையில் அரிய சாதனைகள் புரிந்து கொண்டிருந்த போதிலும், பொருளாதார வெற்றி காண முடிந்ததில்லை.

‘நான்கு வருஷ அனுபவ'த்துக்குப் பிறகு, 1937 அக்டோபர் 15-ஆம் தேதி இதழில், முதல் அத்தியாயம் என்ற பகுதியில், அதன் ஆசிரியர் இவ்வாறு எழுதியிருக்கிறார்

“இதுவரை, பல்வேறு காரணங்களால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த ‘மணிக்கொடி' இனி ஒரு கட்டுப்பாடான ஸ்தாபனத்தின் நிர்வாகத்தில், நவயுகப் பிரசுராலயம் லிமிடெட்டின் பிரசுரமாக வெளிவரும். ஆரம்பம் முதல் இதுவரை இப்பத்திரிகை அடைந்த கஷ்டங்களுக்கெல்லாம் முக்கியமான காரணம் முதலின்மைதான்.

தனிமனிதனின் சக்தி எட்டும் எல்லைவரை மணிக்கொடி யைத்தாங்கி நிற்கும் முயற்சி நடந்தது. ஆயினும் அந்த சக்தி போதவில்லை. பத்திரிகையின் வெளியீட்டில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டது. . . . . . .

சிற்சில சமயங்களில் மணிக்கொடியை நிறுத்திவிடலாமென்று கூட யோசிக்க நேர்ந்ததுண்டு. அந்த சமயங்களிலெல்லாம், நாம் அந்தக் கடைசிப் படியை மிதிக்காமல் தடுத்து, மேலும் மேலும் முயல உற்சாகமும் பலமும் அளித்தது நமது அன்பர்களின் கடிதங்கள்தான். ஒவ்வொரு தடவையும் நாம் அத்தகைய முடிவைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் அன்பர்களின் ஆதரவு நிறைந்த கடிதங்கள் வந்து சேரும்.

இந்த நிலைமையில் மணிக்கொடியை ஒரு கூட்டு ஸ்தாபனமாக்கி, அந்த லட்சியத்தில் மற்றும் பலருக்குப் பங்கு கொடுத்தாலென்னவென்று சில நண்பர்கள் எழுதினார்கள். அவர்கள் யோசனையை ஏற்று ஒரு கூட்டுறவு ஸ்தாபனம் நிறுவ முயற்சிகள் செய்யப்பட்டன.

‘மணிக்கொடி' தோன்றிச் சரியாக நான்கு வருஷங்களாகின்றன. முதல் பதினெட்டு மாதம் ராஜீய வாரப் பதிப்பாக வெளியிடப்பட்டு வந்தது. பின்னர், தமிழ் இலக்கிய வளர்ச்சித் துறையிலிருந்த தேவையையுணர்ந்தும், மணிக்கொடி ஊழியர்களுக்கு இந்தத் துறையிலிருந்த