பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

வல்லிக்கண்ணன்


ஜாக் ஸ்டவ்டர் ஆங்கிலத்தில் எழுதிய ‘காலனிய—ஏகாதிபத்தியச் சூழலில் மானிடவியல்’ கட்டுரையை அஜிதா தமிழில் தந்திருந்தார். இச்சிறப்புக் கட்டுரை 18 பக்கங்கள். ’விவாதத்திற்கு’ என்று ’ஞானி’ எழுதிய ’இந்தியச் சூழலில் கலை இலக்கியவாதிகளின் கடமை’ பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி, சில கவிதைகளும் பிரசுரமாகியிருந்தன.

படிகள் சிறு பத்திரிகைகள் பற்றி அதிகம் சிந்தித்தது. சிறு பத்திரிகைகள் கூட வெறும் இலக்கியம் என்று கூறியே இன்றைய தமிழகத்தைப் பிடித்துள்ள நோயை அகற்ற முடியும் என்று நினைக்கின்றன. நாங்கள் இலக்கியமும் சமூக நோய்களும் அரசியலும்கூட ஓர் பொதுவான— முழுமையான எல்லா அறிவுத்துறைகளின் மொத்த விழிப்புணர்வால்தான் மாற்றம் பெறும், முன்னேறும் என்று நம்புகிறோம் என அழுத்தமாகக் கூறியது.

இது குறித்து மூன்றாவது இதழில் விரிவாகவே எழுதியது.

’படிகள் சிறு பத்திரிகைகளைப் பற்றித் திடமான சில கொள்கைகளைக் கொண்டுள்ளது. இக்கொள்கைகளை ஒரு மனோகரமான காலை வேளையில் உருவாக்கிக் கொள்ளவில்லை. பல நாளைய நீண்ட விவாதத்திற்குப் பிறகே உருவாக்கினோம். அவ்விஷயங்களில் சமூகவியலைச் சிறப்பாய்க் கற்கும் மாணவர்கள் சிலர் முக்கிய பங்கேற்றனர். இவர்கள் படிகளுடன் இணைந்திருப்பதுதான், படிகளுக்குப் பிற தமிழகப் பத்திரிகைகளைவிட தனியான குணத்தைக் கொடுத்துள்ளது.

சிறு பத்திரிகைகளை முதலில் இரண்டாகப் பிரிக்க வேண்டும். வெறும் இலக்கியம் பற்றிப் பேசும் கொல்லிப்பாவை, யாத்ரா, சுவடு, வைகை, சாதனா போன்றவை ஒருபுறம். விழிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம், பிரக்ஞை போன்ற கட்சிக்குட்படாத இடதுசாரிப் பண்புடன் வரும் சிறு பத்திரிகைகள் மற்றொரு புறம் (கட்சிப் பார்வை கொண்ட பத்திரிகைகளை இங்கே விட்டுவிடுகிறோம்). வேறு சில பத்திரிகைகள் நிலைபாடு தெளிவாகவில்லை என்பதால் அவையும் இங்கே சேர்க்கப் படவில்லை.

இவ்விருவகைச் சிறு பத்திரிகைகளையும் முக்கியமானவைகளாகக் காண்கிறோம்.

வெறும் இலக்கியச் சிறு பத்திரிகைகள், பெரும் ஜனரஞ்சகத்திற்கு எப்படியும் எதிர்ப்பானவைதான். கசடதபற, எழுத்து, நடை இலக்கியப்