பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

வல்லிக்கண்ணன்


பத்திரிகைகள் என்று காணவேண்டும். அதன்பின், ஜனரஞ்சகம் என்பது பற்றிய ஆழமான ஆய்வில், பண்டிதரும் பட்டதாரிக் கும்பலும் கண்ணில் தென்படுவர். அதுபோலவே, சிறு பத்திரிகைகளுக்குள் உள்தாக்குதல் குறையும் கட்சிக் கட்டுப்பாட்டுடன் வெளிவரும் பத்திரிகைகளின் வறட்டுத்தனமும் வெளிப்படாதிருக்காது. மும்முரமான தாக்குதல், பெரும் பத்திரிகை பல்கலைக்கழகங்கள் என்று திரும்பும். சிற்றிலக்கியப் பத்திரிகைகளின் லட்சியமான இலக்கியப் பார்வையும் ஆழங் கொள்ளும்’ (படிகள்—ஜூன் 1979 ).

படிகள் சிறு பத்திரிகைகள் மீது கொண்ட அக்கறையையும், கண்ணோட்டத்தையும் அவை சம்பந்தமான கருத்துக்களின் முக்கியத்துவத்தையும் கருதியே விரிவான மேற்கோள்களை இங்கே சேர்க்க நேரிட்டது.

ஜனரஞ்சகப் பத்திரிகை உலகில் பெரும் கவனிப்புப் பெற்று, வாசகர்களின் பாராட்டுதலைப் பெரும் அளவில் சம்பாதித்த சுஜாதாவைப் பேட்டி கண்டு அந்த உரையாடலை விரிவாகப் பிரசுரித்தது படிகள் வரலாற்றில் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

‘சுஜாதா பெரும் பத்திரிகை உலகில் புகழுடன் விளங்கும், சிறு பத்திரிகைச் சூழலை நன்கு அறிந்த, நன்கு மதிக்கும் ஒரே எழுத்தாளர் என்ற முறையில் தமிழகச் சந்தையில் ( market) நடக்கும் பெரும் பத்திரிகை இலக்கிய வியாபாரத்தைச் சுட்டிக் காட்டவும், தனி நபர் லாப நோக்கம் சமூகத்தில் ஓர் அங்கமான இலக்கியத்தையும் Commodity யாக மாற்றுவதை விளக்கவும் அவரை அணுகினோம். சுஜாதா மீது தனிநபர் தாக்கு நடத்துவதால் தமிழ் இலக்கிய வியாபாரச் சூழலை அழிக்க முடியாது. வேண்டுமென்றால் ஒரு சுஜாதா எழுதாமல் இருக்கலாம், நம் வசைபாடலுக்குப் பயந்து ஆயிரம் சுஜாதாக்கள் வருகிறார்களே ! எங்கள் எண்ணம் சுஜாதாக்கள் வியாபாரப் பத்திரிகை குணத்துக்கு ஏற்பவுள்ள விதிகளுக்குத் தக உருவாகிறார்கள் என்பதே. எனவே இந்தச் சமூக நிகழ்வைச் சரியாய் விளக்குவதும், விளங்கிக் கொள்வதும் நம் கடமை. தனிநபர் பொறுப்பை நாங்கள் குறைக்கவில்லை என்பதைப் பேட்டியின் கேள்விகளில் உள்ள பண்பைக் கூர்ந்து கவனிப்பவர்கள் புரிவார்கள். இத்தகைய ஆய்வு இதுவரை பெரும் பத்திரிகை எழுத்தாளர்களைப் பயன்படுத்தி, சமூகவியல் பார்வையில், செய்யப்படவில்லை’ (படிகள்).