பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

வல்லிக்கண்ணன்


அதாவது ஓவியம் அல்ல, சிற்பம் அல்ல, நாடகம் அல்ல, கவிதை அல்ல, திரைப்படம் அல்ல, இசை அல்ல. ஆனால் இவைகளையும் மற்றும் அரசியல், சமூகவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், சரித்திரம், விஞ்ஞானம் முதலியவற்றையும் சேர்ந்த கலாச்சாரக் களனேயாகும்... கலாச்சாரம் என்று—வெறும் கலை சார்ந்த, இலக்கியம் சார்ந்த களனை யாரும் சொல்வதில்லை. வாழ்வின் இயக்கம் பற்றிக் கவலைப்படும் அனைத்துத் துறைகளையும் தழுவி அலசுவதுதான் கலாச்சார ஆய்வின் வேலை. படிகள் தன்னால் முடிந்த எல்லாத் துறைகளையும் தொட்டு நிற்கும் ஜீவித விருக்ஷம்...தமிழின் வாழ்வு பற்றிய முழுமையே எங்கள் அக்கறை, சமூகவியலாரும் மானுடவியலாரும் சொல்லும் கலாச்சாரம் தான் எங்கள் களன் என்று படிகள் அழுத்தமாக அறிவித்து வந்தது.

தமிழ்ப் பத்திரிகைகள்—சிறு பத்திரிகைகள் கூட—அக்கறை காட்டியிராத பல கனமான விஷயங்களைத் தனது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் படிகள் ஆர்வம் கொண்டிருந்தது.

‘சமூகவியலில் ஒரு புதிய திருப்பத்தைத் தோற்றுவித்த அமெரிக்க நாட்டின் தலைசிறந்த சமூக விஞ்ஞானி— சமூக விஞ்ஞானத்தைச் சரியான பாதையில் கொண்டு சென்றவர் என்று கீர்த்தி பெற்றவரான ரைட் மில்ஸ் பற்றி அறிமுகக் கட்டுரை (சிவராமன்).

மார்க்ஸியத்திற்கு இன்று வரை அளிக்கப்பட்டுள்ள புரிந்து கொள்ளுதலில்—லெனினிசம், டிராட்ஸ்கியிசம், ஸ்டாலினிசம், மாவோயிசம் போல் குவேராயிசமும் ஒன்று அது ஒரு கூர்மையான ஆழமான ஆய்வுக்குரியது என்று ஷே குவேரா பற்றி அறிமுகமும் ஆய்வும், (சேதுராமலிங்கம்).

எதற்கு எழுதுகிறோம்—ழான் பவுல் சார்த்தர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

மார்க்ஸியம்—தேடல்களில் எழும் பிரச்னைகள்—ராயன் (13 பக்கங்கள்).

புதிய இலக்கியக் கோட்பாடுகளைக் கற்பித்தலில் எழும் பிரச்னைகள்.

சமூக மாற்றமும் புதிய ஆதிக்க சக்திகளின் தோற்றமும்— நூல் அறிமுகம் (பி. எஸ். ஆர். ).

சார்த். ஓர் தத்துவத் தேடலின் புதிய பரிமாணங்கள் (சாரு நிவேதிதா ).