பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வல்லிக்கண்ணன்


உற்சாகத்தினாலும் மாதமிருமுறை சிறுகதைப் பத்திரிகையாக மாற்றப்பட்டது. . . . .

கூட்டு ஸ்தாபனம் தற்காலிகமாக இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 'மணிக் கொடி' யைச் சீர்திருத்தி அபிவிருத்திகளுடன் தொடர்ந்து பிரசுரிப்பது. இரண்டாவது, தமிழில் எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் உபயோககரமான புஸ்தகங்களைப் பிரசுரித்து, சுலபமாக எங்கும் கிடைக்கக் கூடிய முறையில் பரப்புவது.”

கூட்டு ஸ்தாபனம் 'நவயுகப் பிரசுராலயம் லிமிடெட்' என்ற பெயரில் இயங்கியது. அது முதலாவதாக, ஏ. என். சிவராமன் எழுதிய 'மாகாண சுயாட்சி' என்ற நூலை எட்டணா விலையில் பிரசுரித்தது. தொடர்ந்து, ப. ராமஸ்வாமி எழுதிய 'மைக்கேல் காலின்ஸ்', கி. ரா. வின் 'தேய்ந்த கனவு' (சார்லஸ் டிக்கன்சின் 'இரு நகரங்களின் கதை' மொழிபெயர்ப்பு), கு. பா. ரா. வின் 'இரட்டை மனிதன்' (டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் மொழிபெயர்ப்பு ) போன்றவற்றை வெளியிட்டது. எட்டணா விலையில், அதிகப் பக்கங்களுடன் பிரசுரமான இவ்வெளியீடுகள் வாசகர்களின் வரவேற்பை மிகுதியாகப் பெற்றன.

அதே சமயம், பெரிய புத்தகங்களாக, வெவ்வேறு விலை விகிதங்களில், புதுமைப்பித்தன் கதைகள், 'உலகத்துச் சிறுகதைகள்' (பு. பி. மொழி பெயர்த்தவை), 'பாஸிஸ்ட் ஜடாமுனி' ( சொ. விருத்தாசலம் என்ற பெயரில் பு: பி. எழுதியது. சர்வாதிகாரி முசோலினியின் வரலாறு), 'கப்சிப் தர்பார்' ( புதுமைப்பித்தனும் ந. ராமரத்னமும் சேர்ந்து எழுதிய ஹிட்லர் வரலாறு) போன்றவற்றையும் வெளியிட்டது.

‘மணிக்கொடி' பத்திரிகை சுயமான சிறுகதைப் படைப்புகளுடன், உலக இலக்கியங்களின் சிறந்த கதைகளையும், இந்திய மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளையும் மொழிபெயர்ப்புகளாக வழங்கிக் கொண்டிருந்தது.

வாசகர்களின் சிந்தனைக்கு வேலை கொடுக்கும் பகுதியாக 'தெரிந்ததும் தெரியாததும்' அமைந்திருந்தது. இலக்கியங்களிலிருந்து தொகுக்கப்பட்ட கேள்விகளும், வேறு பல வினாக்களும் இப்பகுதியில் இடம் பெற்றன. அவற்றுக்கு உரிய விடைகள் விரிவாக மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன.

பிற்காலத்தில், வாசகர்களை வசீகரிப்பதற்காக சினிமா நடிகைகள், நடிகர்கள், படக்காட்சிகளின் படங்களும், திரைப்பட விமர்சனங்களும் மணிக்கொடியில் சேர்க்கப்பட்டன.