பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

வல்லிக்கண்ணன்


இந்த தரிசனம்— இந்த விரிந்த பார்வை— அற்புதங்களைச் சாதிக்கிறது.

ஆற்றலையும் கலையழகையும் இயல்பாகத் தனக்குள் தாங்கிய மனிதன், வரலாற்றுக் களத்தில் வித்தாகிறான். மார்க்ஸிய நோக்கில் இலக்கியவாதியின் விளைவு இத்தகையது.

அப்படியானால், மார்க்ஸியம் கலை இலக்கியப் பிரச்னைகளை முற்றாகக் கண்டதா, தீர்த்ததா என்பது கேள்வி.

மார்க்ஸியம் சந்தித்த பிரச்னைகளிலும் தீர்க்கப்படாதவை பல. தமிழகச் சூழலில் இது மேலும் உண்மை. தமிழகத்தின் கலை இலக்கியப் பிரச்னைகளைக் கண்டறிதலிலும் அவற்றைத் தீர்ப்பதிலும் மார்க்ஸியவாதிகளுக்கு மிக முக்கிய கடமை உண்டு.”

இந்தப் பார்வையோடு பரிமாணம் செயல் புரிந்தது. தாமரை, செம்மலர் ஆகிய முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளில் வந்த கதைகளையும், முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளின் நாவல்களையும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது. தமிழ் இலக்கியத்தில் மார்க்ஸியர்களின் பார்வை, சாதனைகள் பற்றிய இலக்கியத் தேடலில் அது ஈடுபட்டது.

கவிதை மொழிபெயர்ப்புகள், சமூகவியல், அறிவியல், தத்துவக் கட்டுரைகளின் தமிழாக்கம், சுயசிந்தனைக் கட்டுரைகள், விவாதங்கள் முதலியவற்றை பரிமாணம் பிரசுரித்து வந்தது.

குணா, தமிழவன், கதிரவன், நாகராஜன், ஞானி முதலியவர்கள் இதில் எழுதினார்கள்.