பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

வல்லிக்கண்ணன்


ஏழைகள் தூங்கி எழுகிறார்கள். அவர்களிடம் போய் இதைச் சொன்னீரானால் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வீர். அவர்கள் பட்டினி கிடக்காமல் இருக்க ஏதாவது வழி தெரிந்தால் சொல்லும் இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இரும்.

வேறொரு கேள்விக்கு உரிய பதில் எழுத்துலகத்தின் உண்மையை அம்பலமாக்குகிறது : மக்கள் பக்கம் நின்று எழுத முடியாதவர்கள் எல்லாம் இன்று வளவள என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களிடம் நிறையப் பணம் இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு புத்தகங்களின் தரத்தை வளர்க்க முடியாது. புத்தகங்களின் எண்ணிக்கையைத்தான் கூட்ட முடியும்.

இலக்கியப் பணி, சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்டு, 1976 முதல் வெளிவருகிறது 'மன ஓசை',

கருத்துக்களைத் தீவிரமாக வெளியிடும் மற்றொரு மாத இதழ் 'தேன்.மழை'. இது மாணவர் இயக்கப் பத்திரிகை. கல்லூரி மாணவர்களே இதன் ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், ஆசிரியர் குழுவினராகச் செயல்புரிகிறார்கள். சில வருடங்களுக்கு ஒருமுறை இப் பொறுப்பினர்களில் மாறுதல் ஏற்பட்டுப் புதியவர்கள் பணியாற்றுவதில் ஈடுபடுகிறார்கள்.

மாணவர் பிரச்னைகள், உரிமைப் போராட்டங்கள், கல்லூரிகளில் நிகழும் தில்லுமுல்லுகள்—ஊழல்கள், கல்வித் துறையில் காணப்படுகிற குறைபாடுகள் பற்றிய கட்டுரைகள் வேகத்துடன் எழுதப்படுகின்றன. நாட்டில், வாழ்க்கையில் நிகழ்கிற சகல ஊழல்களையும், சீரழிவுகளையும் தீவிரத் தன்மையோடு சுட்டிக் காட்டுகிறது 'தேன்.மழை'. பெரிய பத்திரிகைகளில் வருகிற செய்திகளின் பின்னே மறைந்து கிடக்கும் மறுபக்க உண்மைகளையும், அரசியலில் ஆட்சியின் மற்றும் பல்வேறு கட்சிகளின் இயல்புகளையும் உணர்ச்சிகரமான நடையில் வெளிப்படுத்தும் கட்டுரைகள் இதில் பிரசுரம் பெறுகின்றன. மாணவர்கள் எழுதும் முற்போக்கு உணர்வு கொண்ட கதைகள், கவிதைகளும் இடம் பெறுகின்றன.

தீவிரமான எண்ணங்களை எடுத்துக் கூறும் பத்திரிகைகளில் ‘சுட்டி' யும் சேர்கிறது. கையகல அளவில் வரும் சிறு பத்திரிகை இது. மாதம்தோறும் முதல் தேதியன்று தவறாது வெளிவரும் சுட்டி பல வருடங்களாகப் பிரசுரமாகிறது.