பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

249


‘விழித்தலும் விழிக்க வைத்தலுமே எங்கள் விதிமுறைகள். இது இளைஞர்களுக்குள்ளிருக்கின்ற சக்திகளை வெளிப்படுத்த தட்டுகின்ற முரசு. இந்த எழுத்துக்களால் இரவு விடியாமல் இருக்கலாம். ஆனால் தூங்குகிறவர்கள் விழித்தாக வேண்டும். மக்களைச் சுரண்டல் வலையிலிருந்தும் மூடப் பழக்கங்களிலிருந்தும், ஏமாற்றுவோர் கையிலிருந்தும் வெளிப்படுத்தும் வழிகளை எழுதுங்கள் என்று விழி அறிவிக்கிறது.

இளைஞர் இயக்கச் செயல்கள், இளைஞர் கொள்கைகள் போன்றவற்றையும் பிரசுரிக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டம், ஈக்காடு என்ற இடத்தில் சமூகநலப்பணி புரிகிற ‘ஐகோடெப்‘ வழிகாட்டி என்ற இதழை வெளியிட்டு வருகிறது. சிறிது காலம் இது டைப் செய்யப்பட்டு ரோனியோ இயந்திரம் மூலம் பிரதிகள் தயாரிக்கப்பட்டு, பத்திரிகையாக வந்துகொண்டிருந்தது. பின்னர் அச்சுப் பத்திரிகையாக வளர்ச்சி பெற்றள்ளது.

கிராமப்புறச் சீர்திருத்தம், கிராம மக்களின் நலனுக்கான சிறு தொழில்களின் வளர்ச்சி, குழந்தை நலம், சமூகப் பணிகள் முதலியவற்றில் வழிகாட்டி அக்கறை காட்டுகிறது. கவிதைகள், கதைகளையும் பிரசுரிக்கிறது.

சென்னை, செந்தூரம் இலக்கிய வட்டம், ‘செந்தூரம்‘ என்ற இதழைக் கொண்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் கையெழுத்துப் பத்திரிகையாக வளர்ந்த செந்தூரம் 1984 ஏப்ரல் முதல் அச்சுப் பத்திரிகையாகப் பிரசுரம் பெறுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இந்த இதழின் ஆசிரியர் : கே. ஜகதீஷ்,

‘வாழ்ந்து கெட்டவர்களின் வரலாறுகளும், வாழத் துடிப்போரின் எழுச்சிகளும், வாழ்க்கைக்கு விஷம் கலக்கும் மனிதர்களின் தோலுரிப்பும் இந்த இந்த இதழில் சங்கமிக்கின்றன.

பல பெரிய பத்திரிகைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கவர்ச்சியான மசாலாத்தனங்கள், ஆப்செட் உதவியுடன் ஊரெங்கும் விநியோகம் செய்கையில், இது போன்ற சிறு பத்திரிகைகள் மலர்வதும் வளர்வதும் ஒரு வேதனை நிறைந்த போராட்டம்தான். என்ன செய்வது? போராட்டம் இல்லாமல் வாழ்வே இல்லையே!