பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

25


பத்திரிகை லிமிடெட் கம்பெனியின் நிர்வாகத்துக்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு பி. எஸ். ராமையா ஆசிரியப் பொறுப்பை விட்டுவிட நேரிட்டது. மணிக்கொடி நிர்வாகத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 1938 ஜனவரி 27-ம் நாளுடன், ‘மணிக்கொடி'யோடு ராமையாவுக்கு இருந்த தொடர்பு முடிந்தது. ப. ராமஸ்வாமி (பரா. ) அதன் ஆசிரியரானார். தமிழில் சிறு பத்திரிகைகள்

ப. ரா. முதலில் ஒரு அரசியல்வாதி. இலக்கிய ஈடுபாடு அடுத்தபட்சம்தான் அவருக்கு. அவருடைய பொறுப்பில், மணிக்கொடியில் அரசியல் விவகாரங்களும் மிகுந்த கவனிப்பைப் பெற்றன. ஏ. ஜி. வெங்கடாச்சாரியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் பல பக்கங்களை எடுத்துக் கொண்டன. அரசியல் கார்ட்டுன்கள் வெளியிடப் பெற்றன.

ராமையா காலத்தில் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் மணிக் கொடிக்குக் கதைகள் எழுதி, அதற்குத் தனிச்சிறப்பு அளித்துவந்த படைப்பாளிகள் சிறிது சிறிதாகத் தங்கள் தொடர்பைக் குறைத்து, அப்புறம் எழுதாமலே இருந்துவிட்டார்கள். புது எழுத்தாளர்களின் கதைகள் அதிகம் வந்துள்ளன. உலகத்துக் கதைகளின் மொழிபெயர்ப்புகள் வேறு சிலரால் ( முக்கியமாக, ப. ரா. வின் தம்பி சஞ்சீவியால்) செய்யப் பட்டிருக்கின்றன.

இந்த விதமாக 'மணிக்கொடி' 1930 கடைசிவரை வெளிவந்திருக்கிறது. பிறகு நின்றுவிட்டது. நவயுகப் பிரசுராலயம் லிமிடெட் நிறுவனத்தினர் புத்தகப் பிரசுரத்தில் மட்டுமே கருத்துச் செலுத்தலாயினர்.

‘மணிக்கொடி' ஒரு வரலாறு ஆகிவிட்டது. இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை அது அமைத்துக் கொண்டது.

பின்வந்த இலக்கியவாதிகள் மணிக்கொடி எழுத்தாளர்களைத் தங்கள் முன்னோடிகளாகக் கொண்டார்கள். பின்னர் இலக்கியப் பத்திரிகை நடத்த விரும்பியவர்கள் மணிக்கொடி மாதிரி பத்திரிகை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த அளவுக்கு மணிக்கொடி ஒரு முன்மாதிரி ஆகத் திகழ்ந்தது.

சிறுகதைக்குச் சீரிய பணி ஆற்றியதோடு, மணிக்கொடி, யாப்பில்லாக் கவிதையான வசனகவிதைக்கும் அரங்கம் அமைத்துக் கொடுத்தது. ந. பிச்சமூர்த்தியும், கு. ப. ராஜகோபாலனும் தங்கள் கவிதை முயற்சிகளை இப்பத்திரிகையில் வெளியிட்டார்கள்.

‘மணிக்கொடி' படைப்பாளிகளின் எழுத்துக்களை வெளியிடுவதற்-