பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

வல்லிக்கண்ணன்


சமுதாயத்தையே அவர் காண முயன்றார். அவனுக்குத் தனதென்றிருப்பதெல்லாம் அவனது ஆன்மாவும், ஒரு வாழ்க்கை இலக்கும், தன்னுணர்வுமே. இந்த உணர்வு சுதேசிய வண்ணமாகத் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்திலும், அத்தகைய சிறு சமுதாயங்களைக் கொண்ட நாட்டளவிலும், மனித இனம் என்ற உணர்வால் உலகனைத்திலும் செயல்படும். உலகில் போர் மூளுகிறது என்றால் காரணம் உலகில் ஏதோ கோளாறு காரணமாக இல்லை; மனித உள்ளங்களில் போர் தொடர்ந்து நடைபெறுவதாலேயே. எனவே, உலக அரங்கில் சமாதானம் நிலவ பிரகடனங்களால் மட்டும் முடிந்து விடாது. மனித உள்ளங்களிலிருந்து வன்முறையைக் களைந்தாலன்றி, ஊரிலோ, நாட்டிலோ, உலகிலோ சமாதானம் நிலவ முடியாது. இதைத் தனிமனிதன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை ஏற்றும், தக்க கல்வி கற்றும், உரிய பயிற்சிகள் வழியாகவும், சமுதாய, பொருளாதார அமைப்புகளைத் திருத்தியமைத்து, பொருள் குவியாமை, சுரண்டலின்மை வழியாக ஓர் அகிம்சை சமுதாயத்தை நிர்மாணம் செய்ய மனப்பூர்வமாக முயன்றாலன்றி அடைவது சாத்தியமில்லை.'

சர்வோதயம் ஆசிரியர் வெ. இராமச்சந்திரன் எழுதிய ஒரு கட்டுரையில் காணப்படும் கருத்து இது.

இத்தகைய உயர்ந்த லட்சியத்தை உணர்த்தும் கட்டுரைகள் சர்வோதயம் இதழ்களில் வெளிவருகின்றன. இந்நோக்கில் காந்திஜி, வினோபா, ஆச்சார்ய கிருபளானி, ஜெயப்பிரகாஷ் நாராயண் முதலிய தலைவர்கள் வலியுறுத்தி வந்த கருத்துரைகளும் பிரசுரம் பெறுகின்றன.

சர்வோதயம் மற்றும் கதர் இயக்கம் சம்பந்தமான செய்திகள் ‘சுற்றி வந்தபோது' என்ற பகுதியில் தரப்படுகின்றன. கேள்வி- பதில் பகுதியும் உண்டு.

சர்வோதயம் இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருக்கிறது. சமுதாய நோக்குடன் எழுதப்படும் கவிதைகளைப் பிரசுரிக்கிறது. உயர்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் தொடர் கதை ஒன்றையும் வெளியிடுகிறது. சர்வோதயம் கோவையிலிருந்து பிரசுரமாகிறது.