பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

259


க. நா. சுப்ரமண்யம், நகுலன் போன்ற முன்னோடிகளும், மற்றும் பல புதியவர்களும் ‘ழ’ வில் எழுதியிருக்கிறார்கள். பிறநாட்டுக் கவிஞர்களின் படைப்புகளையும் ‘ழ’ மொழிபெயர்த்து அளித்தது.

‘ழ’ கவிதையில் மிகுந்த அக்கறை காட்டியது. ‘பொருளே இல்லாத கோஷங்களைப் பொய் அபிமானங்களில் கலந்து ஒரு காகிதத் தயாரிப்புத் தொழில்போல் கவிதைத் தொழில் புரிய கும்பல் கும்பலாக நபர்கள் புறப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க நேர்வது நிச்சயமாக அவஸ்தைதான்...இதுவரை அநேகமாகக் கவிதைகளை மட்டுமே வெளியிட்டு வந்ததுபோக, இனி கவிதை குறித்த கட்டுரைகளையும் ‘ழ’ தாங்கி வரப் போகிறது. கவிதை என்பதை ஓர் அறிவார்த்த வேஷமாகத் தரித்திருப்பவர்களை அடையாளம் காட்ட கட்டுரைகளால்தான் முடியும். கவிதை நிஜம். பொய்யையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர்களையும் பற்றிக் கவிதை எழுதலாம். ஆனால் கவிதையில் பொய்ம்மை கூடாது. கவிதையென்ற பெயரில் புனையப்படுகிற பொய்களைக் களைய முற்படுவது அதனால்தான் அவசியமாகிறது.‘

‘ழ’ அதன் 9-ம் இதழில் இப்படிக் கூறியது. அவ்விதமான கட்டுரைகள் சில அவ்வப்போது ‘ழ’ வில் வந்துள்ளன.

புதிதாக வெளிவந்த கவிதை நூல்கள் பற்றிய விரிவான விமர்சனங்களை ‘ழ’ பிரசுரித்திருக்கிறது. -

‘அனுப வத்தில் பார்க்கும்போது இன்றைய கவிதைகளுக்கு இளைஞர்களிடையே நல்லவிதமான வரவேற்பும் எதிர்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு நல்ல கவிதையை இனங்கண்டு கொள்ளும் கூர்மைப்படுத்தப்பட்ட உணர்வை இளைஞர்களிடத்தில் எளிதாகவே பார்க்க முடிகிறது. இருந்தும் துரதிர்ஷ்டவசமாக எல்லாத் தயாரான இளைஞர்களுக்கும் கவிதை போய்ச் சேருவதில்லை. அப்படியே போய்ச் சேர்ந்தாலும் தொடர்ந்து கவிதைகளுடன் பரிச்சயத்திற்கான வாய்ப்பு கைவரப் பெறாமல் போகிறது. இரண்டு வழிகளின் மூலமாக இதைச் செய்ய முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒன்று, கவிதைகளை வெளியிடும் பத்திரிகைகள் கவிதை ஒரு உன்னதமான கலை வெளிப்பாடு என்பதை உணர்ந்து கொண்டு அதற்கான சரியான அந்தஸ்தைத் தரவேண்டும். இரண்டு, கவியரங்கங்களில் கவிஞர்களை அவர்களின் கவிதைகளை வாசிக்கச் சொல்ல வேண்டுமே தவிர, தலைப்புகள் கொடுத்து வாசிக்கச் சொல்லக் கூடாது. இவைகளே