பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

வல்லிக்கண்ணன்


கென்று 1939-ல் சென்னையில், க நா. சுப்ரமண்யம் சூறாவளி பத்திரிகையை ஆரம்பித்தார்.

இது சிறு பத்திரிகை இனத்தைச் சேர்ந்தது அல்ல. இலக்கிய நோக்குடனும் இதர பல விஷயங்களோடும்-கனமான விஷயங்களைக் கொண்டு-ஒரு வாரப் பத்திரிகையை, 'ஆனந்த விகடன்' மாதிரி, விகடனுக்குப் போட்டி மாதிரியும் நடத்த முடியுமா என்று பார்க்கும் ஒரு சோதனை முயற்சியாகவே அது இருந்தது.

இச் சோதனை 1939 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. க. நா. சுப்ரமண்யம் ஆசிரியர். கி. ரா. துணை ஆசிரியர். இவ் வாரப் பத்திரிகையில் புதுமைப்பித்தன், கு. ப. ரா. ந. சிதம்பரசுப்ரமண்யன், ராமையா ஆகியோர் கதைகள் எழுதினார்கள். ச. து. சுப்பிரமணிய யோகியார், பாரதிதாசன் கவிதைகள் வந்தன. க. நா. சு. நிறையவே எழுதியிருக்கிறார். புத்தக மதிப்புரை இதழ்தோறும் இடம் பெற்றது குறிப்பிடத்தகுந்தது. அரசியல் செய்திகள், அரசியல் கட்டுரைகள், பெரிய மனிதர்களைப் பற்றி, சினிமா விமர்சனங்கள், சினிமா சம்பந்தமான படங்கள் எல்லாம் உண்டு.

வசன கவிதை குறித்து ஒரு சுவாரஸ்யமான விவாதத்தை முதன் முதலில் சூறாவளிதான் வளர்த்தது.

‘சூறாவளி' வியாபார வெற்றியாக விளங்கவில்லை. காலம் தவறாது தொடர்ந்து பிரசுரம் பண்ணவும் இயலவில்லை. 20 இதழ்களுடன், 1939 செப்டம்பரில் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

சூறாவளி அட்டைச் சித்திரத்தில் புதுமை பண்ணியது குறிப்பிடத் தகுந்தது. சூறாவளிக் காற்றின் வேகத்தை-அதன் வலிய சக்தியைபுலப்படுத்துவது போன்ற ஓவியங்கள் அட்டைப் படமாக அச்சிடப்பட்டன. ஒவ்வொரு மாதமும், நான்கு வாரங்களுக்கும் ( அல்லது ஐந்து வாரங்கள் ஒரே ஓவியமே. வாரம்தோறும் வெவ்வேறு வர்ணத்தில் அச்சாவது வழக்கம். இவ் ஒவியங்கள் வசீகர வனப்புடன் திகழ்ந்தன.