பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

263


புவியரசின் இந்த வரிகளை நினைத்துக் கொள்ள, எதிர்ப்படும் சின்னச் சின்ன நெருடல்களெல்லாம் காணாமல் போகிறது.

‘சந்தோஷமாய் இருக்கிறது. எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல, சும்மா நடக்கவே. மாலனின் வார்த்தைகள் மனசில், கனவில் கற்பனைகள் சிலதைப் பறித்து இந்த ஸ்வரத்தில் கொண்டு வந்தாயிற்று. பிடரி சிலிர்க்கக் கனைக்கும் அசுவமாய் உற்சாகம் எங்களுக்குள். மலைச் சாரல் கவியரங்கம் முடிந்த பின் புதுருபமெடுத்த, போன ஸ்வரத்தை கள்ளிய பிப்ரவரி முதல் ஞாயிறின் வெயிலில்— கார்டனில் பெற்றுக் கொண்டு வாழ்த்துக்களையும் விமர்சனத்தையும் சொன்ன எங்கள் இனிய ஸ்நேகிதர், பேராசிரியர் சீனிவாசனுக்கு நன்றி. ஸ்வரத்தின் கவிதைகளைப் பற்றிப் பேசிய பலரும் கவிதை உலகில் கம்பீரமாக எழுந்த வானம்பாடியைப் போல, மலைகளின் கொழிக்கும் பகமையோடு, வளமையோடு, ஸ்வரம் கவிதை உலகில் எழும்ப வேண்டும் என்றார்கள். எங்களுக்கும் அதே ஆசைகள் நிறைய நிறைய. அந்த அளவிற்கு உயர்கிறோமோ இல்லையோ, அந்த இலக்கை அடைய வேணுமென்கிற உந்துதலே, ஆசைகளே, மகிழ்ச்சியான விஷயமாய் இருக்கிறது. ஸ்நேகி தத்துடன் நீண்ட கைகளைக் கோத்துக்கொண்டு உயரிய இலக்கை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம்.’

இப்படி உற்சாகத்தின், சந்தோஷத்தின் வெளிப்பாடாகப் பூத்துக் கொண்டிருந்த ’ஸ்வரம்’ அதன் 8-ம் இதழ் முதல் (செப்டம்பர் 1982 ) புதிய வடிவத்தை அடைந்தது. பிரம்மராஜன் அதன் சிறப்பாசிரியர் ஆனார். ஸ்வரம் தரம் நிறைந்த இலக்கியச் சிற்றேடு ஆக வளரலாயிற்று.

புதுமையான, நல்ல கவிதைகள் ஸ்வரம் இதழ்களில் வெளிவந்துள்ளன. ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதை மொழிபெயர்ப்புகள் அதிகம் அறிமுகம் செய்யப்பெற்றன. கவிதை நூல்களின் விமர்சனம் காரசாரமாக எழுதப்பட்டது.

இது குறித்து 12-ம் இதழில் (ஜனவரி 1983) ஆசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார் :

‘உள்நாட்டு அஞ்சல் கடிதத்தில் துவங்கப்பட்ட ஸ்வரம் இன்று முழுவதும் கவிதைக்காகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு இலக்கியச் சிற்றேடாக மாறி நிற்கிறது. 8-ம் இதழிலிருந்து தன் அமைப்பை மாற்றிக் கொண்டதோடன்றி உள்ளடக்கங்களையும் மாற்றியுள்ளது.