பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

வல்லிக்கண்ணன்


தமிழ்க் கவிதையின் இன்றைய சாத்தியப்பாடுகள் அறியப்பட வேண்டுமெனின் கவிதைகள் மீதான தாட்சண்யமற்ற விமர்சனங்களும், கட்டுரைகளும் வெளிவர வெண்டும்

இன்று எழுதவரும் இளம் கவிஞர்களுக்கு கவிதைக் கலை பற்றி அடிப்படை தெரியாத போலிகளும் அரைப் போலிகளும் முன்மாதிரிகள் ஆகிவிடுவது சோகமான விஷயம். எனவே தான் ஸ்வரம் ஐரோப்பிய மற்றும் ஆங்கிலக் கவிஞர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகளைக் தொடர்ந்து வெளியிட இருக்கிறது.

ஸ்வரம் தோற்றத்திலும், அச்சு அமைப்பிலும் எளிமையான அழகுடன் வசீகரமாகத் திகழ்ந்தது, 16-ம் (மே 1983) இதழுக்குப் பிறகு ஸ்வரம் வரவில்லை.

ழ, கவனம், ஸ்வரம் — இச் சிற்றேடுகள் நவீன ஓவியங்களை அட்டைப்படமாக வெளியிட்டு வந்தன.

மீட்சி : உதகமண்டலத்திலிருந்து, ஸ்வரம் கவிதை இதழின் புதிய பரிணாமம் போல மீட்சி என்ற மாத இதழ், 1983 ஆகஸ்டில் தோன்றியது. பிரம்மராஜன் கவனிப்பில் இது வளர்ந்து வருகிறது.

தனது ஓராண்டைச் சிறப்பாகப் பூர்த்தி செய்துள்ள ’மீட்சி’ குறிப்பிடத்தகுந்த நல்ல தரமான இலக்கியச் சிற்றேடு ஆகும்.

சர்வதேசக் கவிஞர்களை அறிமுகம் செய்து கட்டுரை எழுதுவதோடு, அவர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து இலக்கியப் பணி புரிந்துகொண்டிருக்கும் பிரம்மராஜன் மீட்சியில் பல கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளையும் அவர்களது படைப்புகளையும் தந்திருக்கிறார்.

ஆர்தர் கெஸ்லர் பற்றிய நினைவுகளும் வரலாறு பற்றிய சிந்தனைகளும், ஜோர்ஜ் லூயி போர்ஹே கவிதைகள் எஹூதா அமிக்ஹாய் என்ற ஹீப்ரூ மொழிக் கவிஞர், அவரது கவிதைகள்; டென்னசி வில்லியம்ஸ் கவிதைகள் முக்கியமானவை. டி. எஸ். எலியட்டின் ‘தி வேஸ்ட் லேண்ட்’ ஐ முழுமையாக மொழிபெயர்த்து ’பாழ் நிலம்’ என மீட்சி வெளியிட்டுள்ளதை விசேஷமாகக் குறிப்பிட வேண்டும்.

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் ’வாளின் வடிவம்’, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ’செவ்வாய்க்கிழமை மதிய உறக்கம்’ கதைகளின் மொழிபெயர்ப்பும் மீட்சியில் வந்துள்ளன.