பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

வல்லிக்கண்ணன்


’பத்திரிகை, எழுதுபவருக்கும் வாசகருக்குமான பொதுவான மேடையாக இயங்குகிறது. இலக்கியம் மட்டுமின்றி பல்வேறு கலைகளைப் பற்றிய முடிவான கருத்துக்களைப் பத்திரிகை வெளிப்படுத்த முடியும். பத்திரிகைக்கான முறைகள் உள்ளன. நவீன கலைகளுக்கும் நவீன படைப்பாளிகளுக்கும் உரிய ஸ்தானத்தை அளித்து போஷிப்பது பத்திரிகைக்கு அவசியமாகிறது. எந்தக் கலைப் படைப்பிலும் உரிய நேர்மையைக் காப்பது இதனால் முக்கியமாகிறது. சிறு பத்திரிகையின் முடிவும் துவக்கமும் எந்த உயிருக்கும் அமைந்த விதிபோல் தீர்மானமானது. படைப்பிலக்கியம் மேற்சொன்ன விதியிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் எந்தக் கலையும் உண்மையில் நம் வாழ்வுக்கு நிறைவைத் தருபவை. இந்த அடிப்படையைத் தன்னுடைய முக்கிய அம்சமாக மையம் கருதுகிறது’ என்று அது அறிவித்துள்ளது.

ஓவியர் கே. எம். ஆதிமூலம் வரைந்த ஓவியம் ஒன்றை முதல் இதழின் அட்டைப்படமாக வெளியிட்டு, ‘ஆதிமூலத்தின் அக உலகம்’ என்று சா. கந்தசாமி எழுதிய கட்டுரையை உள்ளே பிரசுரித்தது. ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் மற்றும் சுயபடைப்புகளும் மையம் இதழ்களில் இடம் பெறுகின்றன.

கதைகள், கட்டுரைகள், புத்தக மதிப்புரை முதலியனவும் வருகின்றன. நீல. பத்மநாபன், நகுலன், காஸ்யபன், ஞானக்கூத்தன், கலாப்ரியா, ஆனந்த், ஆர். ராஜகோபாலன், காளி—தாஸ் முதலியவர்கள் ( ழ, கவனம் சிற்றேடுகளில் எழுதிய பலரும்) மையம் காலாண்டு இதழில் எழுதுகிறார்கள்.

உயிர்மெய் : கோவையிலிருந்து வெளிவரும் கவிதை இதழ். வித்தியாசமான, புதுமையான, தரமான கவிதைகளை வெளியிடுவதில் அக்கறை கொண்டுள்ளது. பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறது. பிரம்மராஜன் கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும் வருகின்றன.

‘தமிழ் கவிதையுலகு தேங்கிக் கிடக்கிறது. தற்பொழுது சொல்லிக் கொள்ளக்கூட கைக்கடக்கமாய்த்தான் உள்ள கவிஞர்கள் பற்றி, புற்றீசலென வெளிவருகிற படைப்புகள் பற்றிய தொடர்ந்த வியாக்யானம், புதுக்கவிதை என்றொரு பதம் இனியும் உபயோகத்தில் இருப்பது பற்றிய முரண், கவிதை—கவிதையில்லாதவை என்று இருக்க வேண்டியதன் நியாயம், இவையனைத்தையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.