பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

267


நாங்கள் மாணவர்களாய் இருந்தபொழுது தொடங்கி இப்பொழுதும் இதைத் தொடர்வதால் முந்தைய குறைகளையும் கலை வறட்சியையும் முழுக்க விடுத்து, புதிய வடிவங்களுக்கும் சமகால உலக கவிதைகளுக்கும், முக்கியமாக கவிதை மீதான கட்டுரைகளுக்கும் இடமளிக்க எண்ணியுள்ளோம்’ என்று ’உயிர்மெய்’ 1984-ல் ஒரு இதழில் அறிவித் துள்ளது.

’மிருணாள்சென் கூறுகிறார், I try to disturb you and get disturbed in the process. இதுதான் உண்மையான கலையின், கலைஞனின் எதிர்பார்ப்பும்’ என்று கூறுகிற உயிர்மெய் அவ்வழியில் செயல்படுவதில் ஆர்வம் காட்டுகிறது எனக் கருதலாம்.

நிகழ் : இலக்கிய இதழ். கோவையிலிருந்து வெளிவருகிறது. ஆசிரியர் —இரத்தினம். .

சூடாகவும் விறுவிறுப்பாகவும் புதிய நூல்கள் பற்றிய திறனாய்வை நிகழ் பிரசுரிக்கிறது. ஞானி புத்தகத் திறனாய்வு செய்வதுடன்,சிந்திக்கத் தூண்டுகிற கனமான கட்டுரைகளையும் இதில் எழுதுகிறார். டி. எஸ். இலியட்டின் இலக்கியக் கொள்கை என்ற தலைப்பில் அவர் எழுதிய நீண்ட கட்டுரை முக்கியமானது. இலக்கிய உலகம், எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளையும் குறிப்புகளையும் அவ்வப்போது தருகிறது.

முதல் இதழில் ’தற்காலத் தமிழிலக்கியத்தில் தேக்கம்’ எனும் பொருள் குறித்து ஞானி, சுகுமாரன், நிர்மல் விஸ்வநாதன், அறிவன், அரசு, அமரநாதன் ஆகியோர் சர்ச்சை செய்து வெளியிட்ட உரையாடல் உபயோகமான எண்ணங்களைக் கொண்டுள்ளது.

சா. கந்தசாமியின் நாவல்கள் ஆய்வு செய்து ’சா. கந்தசாமியும் கண்ணாடித் துண்டும்’ என்று ஞானி எழுதிய கட்டுரை உண்மையான மதிப்பீடாக விளங்குகிறது.

கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு வந்த நிகழ் 4-ம் இதழிலிருந்து இதர பிரச்னைகளிலும் அக்கறை கொள்ளத் தொடங்கியது.

’தற்கால அரசியல், பொருளியல், கலாச்சாரச் சூழலில் கலை இலக்கியம் பற்றிய சரியான பார்வையின் தேவை பற்றி நாம் விவரிக்க