பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

வல்லிக்கண்ணன்


வலியுறுத்தும் விதத்தில் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் ‘தமிழமுது’ இதழ்களில் பிரசுரிக்கப்படுகின்றன.

உலக நாடுகளில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் பற்றிய கட்டுரைகளும், தமிழ் ஈழச் செய்திகளும் இதில் இடம் பெறுகின்றன.

போராட்ட உணர்வைக் காட்டும் சித்திரங்களை அட்டையில் வெளியிட்டு, அவற்றுக்கு ஏற்ற உணர்ச்சி செறிந்த கவிதைகளைத் தமிழமுது பிரசுரிக்கிறது.

தமிழகக் கவிஞர்கள், படைப்பாளிகளின் கவிதைகள், கதைகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிடுகிறது. கவிஞர்கள் மு, மேத்தா, வைரமுத்து, இன்குலாப், நா. காமராசன், குருவிக்கரம்பை சண்முகம், செவ்வண்ணன் மற்றும் இளைய கவிஞர்கள் பலர் உணர்ச்சியூட்டும் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.

எழுத்தாளர்களைப் பேட்டிகண்டு பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவர்களது கருத்துக்களை அறிந்து தமிழமுது வெளியிட்டுள்ளது. இவ் வகையில், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கண முத்தையா, பாலகுமாரன், ராஜம் கிருஷ்ணன், தா. பாண்டியன், பரீக்க்ஷாஞாநி முதலியவர்களின் பேட்டிகள் அச்சாகியுள்ளன.

கேள்வி—பதில் பகுதி மூலம் பல விதமான சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

சோவியத் எழுத்தாளர் பரீஸ் வலிலியேவ் எழுதிய, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட வீர மங்கையரின் அனுபவங்களைச் சித்திரிக்கும், ரசமான நவீனம் ’அதிகாலையின் அமைதியில்!’ தொடர்கதையாக வருகிறது.

’தமிழீழத்தைப் பொறுத்தமட்டில் வெறும் இன விடுதலையாக மட்டுமே இருக்கக் கூடாது— இருக்கவும் முடியாது. இயக்கமானது சரியான சோஷலிசத் திசைமார்க்கத்தில் தனது கொள்கையை முன் வைப்பது தமிழீழ மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது’ என்று குறிப்பிடும் தமிழமுது நம்பிக்கை ஒளியை எங்கும் பரப்ப முயல்கிறது. தனது இலட்சியப் பாதையில் முன்னேறி வளர்கிறது.