பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

வல்லிக்கண்ணன்


நின்று போயிற்று. 1970 களில் இலங்கையில் பலப்பல சிறு பத்திரிகைகள் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது. அவற்றைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு இங்கே யாருக்கும் கிட்டியதாகத் தெரியவில்லை. என் இனிய நண்பர்கள் சிலரது உதவியினால் ஓரளவுக்குத் தகவல்கள் எனக்குக் கிடைக்க வழி ஏற்பட்டது. அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் நான் இக் கட்டுரையை எழுத வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் பல இதழ்களைப் பார்க்க முடியாத நிலையில், கிடைத்த ஒன்று இரண்டைப் பார்த்து விட்டு அவை பற்றி எழுத நேரிட்டிருப்பதால், இலங்கைச் சிறு பத்திரிகைகள் பற்றி மேம்போக்காய் சில தகவல்களை மட்டுமே தர முடிகிறது.

இலங்கை ’தினகரன்’ நாளிதழின் வார மஞ்சரியில், தெளிவத்தை ஜோசப் என்ற ஈழத்து எழுத்தாளர் ’ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட ஏடு பாரதி’ என்ற தலைப்பில் சிற்றேடு பாரதி பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.

ஜனரஞ்சகப் பத்திரிகைகளான வணிகப் பத்திரிகைகள், கொள்கைப் பிடிப்போடு நடத்தப்படுகிற சிற்றேடுகள் குறித்து விளக்கமாக அறிவிக்கும் அவருடைய கட்டுரையிலிருந்து சில வரிகள் :

“எவ்வித சமுதாய நோக்கமோ இன்னபிறவோ இன்றி வெறுமனே மக்களின் இரசனையை மழுக்கி, வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பத்திரிகைகளுக்கு அரையிலும் குறையிலும் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதில்லை.

அவர்களுடைய இலக்கு பணம். இலக்கை நோக்கிப் பயணம் செய்யும் போது இடையே வரும் தடைகளை உடைத்தெறியப் பணத்தால் முடியும்.

மற்றவர்களின் இலக்கு பணம் அல்ல. ஒரு தர நிர்ணயம். இந்த இரண்டாவது குழுவினர் தங்களது இலக்கு நோக்கி நடக்கும்போது இடையில் குறுக்கிடும் முதல் தடை பணம்.

சில நேரங்களில் பணத்தால் இலட்சியங்களை உடைக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களிலுமே இலட்சியங்களால் பண்த்தை உடைக்க முடிவதில்லை, ஆகவே ஏதாவதோர் இலட்சியத்துடன் ஓர் ஏட்டை ஆரம்பிக்கிறவர்கள் இடையில் குறுக்கிடும் பணத்துடன் மோதிப் பார்த்து முடியாமல் தோற்றுவிடுவதுண்டு. இந்தத் தோல்வியே பெருமைக்குரியதுதான்...