பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

297


நாறும் கீழ்மைகள் தகரட்டும். இது அன்றும் இன்றும் என்றும் களனியின் தாரக மந்திரம், அழகான ரோசாப்பூக்கள் களனியின் இலக்கல்ல. ஆனால் அவை அழகூட்டி அலங்கரிப்பதற்கு களனி எதிரல்ல’ என்று அது அறிவித்தது.

’கிட்ட நிற்கும் நண்பர்களை மட்டுமல்ல, எட்டி நிற்கும் நண்பர்களையும் களனி அரவணைத்து முன்னேறும். காலை இளங்கதிர்போல் நாளும் தோன்றுகிற புதுமைச் சிற்பிகளின் புலமைக்குக் களமாய் களனி அமைவாகும். முதிய தலைமுறையின் முத்தான அனுபவங்கள் பிற்கால சந்ததிக்குப் பின்பலமாய் அமைவதற்குக் களனி துணையாகும்’ என்றும் நம்பிக்கைக் குரல் கொடுத்தது.

சமுதாயப் பார்வையுடன் எழுதப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகளோடு கலை விமர்சனங்களையும் ’களனி’ வெளியிட்டது. நாடக விமர்சனத்துடன், மிருனாள்ஸென் எழுதிய கட்டுரைகளையும் மொழிபெயர்த்து வெளியிட்டது.

தாயகம் : 1974—ல், யாழ்ப்பாணம் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக தாயகம் வெளிவந்தது. என். கே. ரகுநாதன், யோகன், சில்லையூர் செல்வராசன், அன்பு ஜவஹர்ஷா போன்றவர்களின் படைப்புக்களையும், க. கைலாசபதியின் கட்டுரைகளையும் தாங்கி வந்தது. ’தோட்டத் தொழிலாளரின் தொடர்ச்சியான சோக வரலாற்றை’ முக்கியப்படுத்தும் கட்டுரைகளும் கதைகளும் அதில் அதிகம் இடம் பெற்றன.

நவயுகம் : காரைத் தீவில் பிரசுரம் பெற்றது. மருதூர்க் கொத்தன் கதைகளும், திக்குவெல்லைக் கமால், தில்லையடிச்செல்வன், மேமன் கவி போன்றோரின் கவிதைகளும் வெளிவந்தன.

1979—ல் ’சமர் இலக்கிய வட்டக் குழுவினருக்காக ’சமர்’ என்ற முற்போக்கு இலக்கிய ஏடு தோன்றியது. ஆசிரியர் டானியல் அன்ரனி.

கீற்று இலக்கிய வட்டம் என்ற அமைப்பு 1979-ல் ’கீற்று’ என்ற காலாண்டு சஞ்சிகையை நடத்தியது. கல்முனை எனும் இடத்திலிருந்து பிரசுரமான இது வழக்கமான கவிதை, கதை, மொழிபெயர்ப்புக் கதைகள், நாடக விமர்சனம் முதலியவற்றை வெளியிட்டது. சினிமா சம்பந்தமான கட்டுரைகளும் பிரசுரம் பெற்றன.

“உண்ணுவதற்கும் நல்ல உணவின்றி உழைப்பவனின் எண்ணத்தை