பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298


நாளும் இலக்கியமாய்ப் பாய்ச்சுகின்ற மின்னலெனும் கீற்று வீச்சாகும் எம் எழுத்து” என்று பெருமையுடன் கூறிக்கொண்ட இக் காலாண்டு ஏட்டின் ஆசிரியப் பொறுப்பை ஆர். என். லோகேந்திரலிங்கம், கல்லூரன், கலைக்கொழுந்தன் ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.

சர்ச்சைக்குரிய விஷயங்கள், விறுவிறுப்பான தகவல்கள், பரபரப்பு ஏற்படுத்தும் அபிப்பிராயங்கள் முதலியவற்றை வெளியிடுவதில் ’கீற்று’ ஆர்வம் காட்டியது. எனவே அது இலக்கிய அபிமானிகள், பொதுவான வாசகர்கள் முதலியோரது கவனத்தைக் கவர்ந்தது.

சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் 1975 ஏப்ரல் முதல் சுடர் என்ற கலை இலக்கியத் திங்கள் இதழை நடத்தியது. இது சில வருடங்கள் தொடர்ந்து பிரசுரம் பெற்றதாகத் தெரிகிறது.

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளிடையே ’சிரித்திரன்’ தனி இடம் பெற்றுள்ளது. இது பரவலான கவனிப்புக்கு இலக்காகி, தமிழகத்தின் சஞ்சிகைகளின் கவனத்தையும் கவர்ந்து பெருமை பெற்றிருக்கிறது.

இதன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் (சிவா) ஒரு ஓவியர். இலங்கையின் பிரபல தினசரிகளான தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் சவாரித் தம்பர், சின்னக் குட்டி, மைனர் மச்சான் போன்ற பாத்திரங்கள் மூலம் தனக்கெனத் தனி இடம் தேடிக்கொண்டவர் சிவா. இந்த நகைச்சுவைப் படைப்புகளைத் தூரிகை மூலம் அளித்து வாசகர்களை ஈர்த்துக் கொண்டவர்.

வட இந்தியாவிலிருந்து வெளிவரும் ’கொஞ்ச்’, ’லோகசத்தா’ ஆகிய மராட்டிய ஏடுகளிலும் சிவாவின் ஓவியப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

அரசாங்கக் கட்டிடக் கலைப்பகுதியில் கடமையாற்றிய சிவாவுக்கு ‘தினகரன்’ ஆசிரியராகப் பணியாற்றிய க. கைலாசபதியின் நட்பு கிடைத்தது. தினகரன் நாளிதழில் தொடர்ந்து தனது படைப்புகளைப் பிரசுரிப்பதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அவர் சிறிது காலம் பம்பாயில் தங்கி கட்டிடக் கலை இயலில் பயிற்சி பெற நேர்ந்தது. அப்போதுதான் சிவாவின் கார்ட்டூன் சித்திரங்கள் பிளிட்ஸ் முதலிய பத்திரிகைகளில் வரலாயின. இவருடைய சித்திரப்