பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

299


படைப்புகளைப் பிரசுரித்த ‘கொஞ்ச்’ என்ற சஞ்சிகை இந்திய தேசியத் தலைவரான வல்லபாய் பட்டேலின் மகன் தாதாபாய் பட்டேல் நடத்தியது ஆகும்.

இலங்கை எழுத்து உலகத்தில் ஆட்சி செலுத்திய ‘முற்போக்கு—பிற்போக்கு—நற்போக்கு என்ற எதிலும் சிக்காதவர்’ சிரித்திரன் சிவா. சிரித்திரன் என்ற சஞ்சிகையை நடத்துவதற்காக அவர் தான் பார்த்து வந்த அரசாங்க உத்தியோகத்தைத் துறந்தார். தனக்குக் கிடைத்த பணத்தில் பத்திரிகையை ஆரம்பித்தார். அது வெற்றிகரமாக வளர்ந்தது.

‘செய்தொழில் தெய்வம், சிரிப்பே சீவியம்‘ என்பதை இலட்சிய எண்ணமாகக் கொண்டது சிரித்திரன்.

சிரித்திரனில் முக்கிய இடம் பெறும் மகுடியின் கேள்வி பதில் பகுதி வாசகர்களுக்கு வெகுவாகப் பிடித்தது ஆகும். நகைச்சுவையோடு கூடிய சீர்திருத்தக் கருத்துக்களும், சமூகப் பார்வையும் படிப்பவர்களைச் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் தூண்டும். இக்கேள்வி—பதில்கள் புத்தகமாகவும் வெளிவந்திருக்கின்றன.

இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்துடனேயே பல பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

குமரன், புதுசு, சமூகதீபம், களம், ஒளி, நதி — இப்படி அநேகம். இவற்றில் ‘தாரகை’ என்பதும் ஒன்றும்.

‘வேள்வியொன்று காண வாரீர் !‘ என்று அது எழுத்தாளர்களை அழைத்தது.

‘இளம் எழுத்தாளர்களின் உள்ளக் குமுறல்கள்-எழுதத் துடிக்கும் இலக்கிய ஆர்வலர்களின் இதயத்துடிப்புகள் எமக்கும் கேட்கிறது. தாள் தாளாக எழுதி அனுப்பிவிட்டு அவை பிரசுரிக்கப்படாமையால் பாழ் பாழாகப் போன பல படைப்பாளிகளின் இதயங்களையும் பரிசோதித்துப் பார்த்து விட்டோம்.

இமயமலையில் ஏறுவது மிகமிகக் கஷ்டமான காரியம், ஆனால் ஒரு இலக்கியப் படைப்பாளியின் இலட்சியப் படைப்பைப் பத்திரிகையில் வெளிக் கொணர்வது அதைவிடக் கஷ்டம். இப்படிச் சொல்லிக் கொண்டு, இலக்கிய உலகத்தையே கைவிட்டுச் சென்ற பல அன்பர்களோடும் நாம் பழகி விட்டோம்.