பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

301


சில கவிதைகள், ‘சீனாவில் பணிபுரியும் திருமதி ராணி சின்னத்தம்பியுடன் ஒரு பேட்டி’; ‘பாரதி நூற்றாண்டு விழா 1982‘ என்று தலையங்கம்-இவை கிருதயுகம் இரண்டாவது இதழின் உள்ளடக்கம். இவை இந்தப் பத்திரிகையின் தனித்தன்மையை எடுத்துக் காட்டும் விதத்தில் இருக்கின்றன. கிருதயுகம் எத்தனை இதழ்கள் ( எத்தனை காலம் ) வெளிவந்தது என்று தெரியவில்லை.

பூரணி, அலை, கவிஞன் என்று சில இலக்கியப் பத்திரிகைகள் வந்ததாகவும், அவை இலக்கியவாதிகளின் கவனிப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியனவாக இருந்தன என்றும் தெரிய வருகிறது. இவற்றின் பிரதிகள் என் பார்வைக்கோ, என் நண்பர்கள் பார்வைக்கோ கிடைக்க வில்லை.

இலங்கையில் பிரசுரமான சிறு பத்திரிகைகளில்— சிறிது கால அளவே வாழ்ந்த போதிலும்— முக்கிய கவனிப்புக்கு உரியதாகி, ஏதோ சில வகைகளில் தாக்கங்கள் ஏற்படுத்திய வெளியீடுகளில், ‘தீர்த்தக்கரை‘க்கு முக்கிய இடம் உண்டு.

காலாண்டு ஏடு ஆக வெளிவந்த தீர்த்தக்கரை ஐந்து இதழ்கள் தான் பிரசுரம் பெற்றது என்று ஒரு இலக்கிய ரசிகர் குறிப்பிடுகிறார்.

‘மலையகத்தின் இளைய தலைமுறையைச் சார்ந்த புத்திஜீவி வட்டத்தினரால் தயாரிக்கப்பட்ட இந்தச் சஞ்சிகை ‘தீர்த்தக்கரை இலக்கிய வட்டத்திற்காக‘, எல். சாந்தி குமாரை ஆசிரியராகவும், எஸ். நோபெட், எம். தியாகராம், எல். ஜோதிகுமார் ஆகியோரை ஆசிரியர் குழு ஆகவும் கொண்டு இயங்கியது.

‘சிந்தனை பேதங்களுக்கெல்லாம் அப்பால் நின்று இலக்கியம் படைக்கும் நவீன கம்பர்கள் ஒருபுறமும், எமக்கு இளங்காலையின் கதகதப்புத் தேவையில்லை, நெருப்பைத் தாருங்கள் என்று யதார்த்தத்தை மறந்த நக்கீரர்கள் ஒருபுறமும் நின்று வரிந்து கட்டிக்கொண்டு மகத்தான கூப்பாடு போடுகையில், இவற்றின் இடையே அல்லலுறும் இளம் எழுத்தாளர்களைப் பார்த்தும், வந்து குவியும் மூன்றாந்தர சஞ்சிகைகளில் புதையுண்டு கிடக்கும் பல தரமான வாசகர் கூட்டத்தைப் பார்த்துமே நாம் எம்மை இந்தப் புதிய அக்கினிப் பரீட்சையில் இறக்கிக் கொள்ள நேரிட்டது.

இவ்வாறு கூறிக்கொண்டு தீர்த்தக்கரை தோன்றியது. மலையகத்தின் முன்னேற்றத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த அறிவு