பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

வல்லிக்கண்ணன்


வல்லவர்‘ பற்றிய குறிப்பு, அறிவியல் சிந்தனைகள், ‘தத்துவப் பாதையில்‘ என்று சிந்தனைக் கட்டுரை, ‘கலைப்பூங்கா‘ வில் சினிமா விஷயங்கள், ‘நூல் மணம்‘ என்று புத்தக மதிப்புரை இப்படிப் பலப்பல பகுதிகள். கவிமலர்கள் என்ற தலைப்பில் புதுக் கவிதைகளும், ஆனைவாரி ஆனந்தன் எழுதும் கவிதைகளும் தொடர்கதையும், வேறு ஒரு தொடர்கதையும் சிறுகதையும் இதில் வருகின்றன. ‘உடல் நலம் காப்போம்‘ என்று ஆரோக்கியக் குறிப்புகளும் அவ்வப்போது இடம் பெறுகின்றன.

மு. விவேகானந்தன் என்ற எழுத்தாளர், ரசிகர், ‘கவிக்குயில்‘ வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகிறார்.

‘வழக்கியல்‘ என்று சட்ட ஆலோசனைகள் கூறும் ஒரு பகுதியும், ‘நமக்குள்ளே‘ என்ற கேள்வி பதில் பகுதியும் கவிக்குயிலில் உள்ளன.

கறுப்பு மலர்- மாத இதழ். ‘சமூக மாற்றத்தில் கருத்தாய் இருக்கும் மலர். உழைக்கும் மக்களின் உறவு மலர். சமுதாயப் பிரச்னைகளை அலசுங்கள்‘ என்று அறிவித்தபடி வருகிற இச்சிறு பத்திரிகையின் பல இதழ்கள் ‘சுட்டி‘ பத்திரிகையின் அளவிலும் தன்மையிலுமே அமைந்துள்ளன.

கவிஞர் பாரதிப்ரியா, இளைஞர் இலக்கிய வட்டம் அமைப்புக்காகத் தயாரிக்கும் தனிச்சுற்றிதழ் ‘கறுப்பு மலர்‘. மக்களுக்கான மக்கள் இலக்கியம் படைப்பது இளம் எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவிப்பது மாதம் ஒரு கருத்தரங்கம், கவியரங்கம் நடத்துவது; சமூகப் பிரச்னைகளை ஆராய்வது—அவற்றுக்கான தீர்வை நோக்கி விவாதிப்பது, புதுப் படைப்பாளிகளை வரவேற்பது; அவர்கள் புதுமைப் படைப்புகளை படைக்கத் தூண்டுவது; மக்கள் மத்தியில் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்துவது மக்கள் இலக்கியத்தின் அருமையை மக்களுக்கு உணர்த்துவது; சாதி மத அமைப்புகளைச் சாராதிருப்பது, மடமைகளை எதிர்ப்பது—

இவை இளைஞர் இலக்கிய வட்டத்தின் நோக்கங்கள். இம்முற்போக்குச் சிந்தனைகள் ‘கறுப்பு மலர்‘ பிரசுரிக்கும் கவிதைகளிலும் கதை கட்டுரைகளிலும் ஒலி செய்கின்றன. இச்சிற்றேடு 1983 மே முதல் வந்து கொண்டிருக்கிறது.

சமுதாயப் பார்வையுடன், முற்போக்குச் சிந்தனைகளையும் படைப்புகளையும் வரவேற்றுப் பரப்பும் நோக்குடன் தமிழ்நாட்டின் வெவ்வேறு