பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

வல்லிக்கண்ணன்


அசோகமித்திரன், அம்பை, வண்ணநிலவன், ராஜரங்கன், சிவசங்கரா, தி. சா. ராஜு அறிவும் உணர்வும் எதார்த்த சூழ்நிலையும் கலந்து கதை படைப்பார்கள், ஜெயந்தன், அம்ஷன்குமார் நாடகத்தில் புதுமுயற்சி செய்வார்கள். முஸ்தபா, காஸ்யபன் சீண்டி விளையாடுவார்கள். டென்னிஸ் வீரர் பற்றிய கட்டுரையென்ன, எம். ஜி. ஆர். பேட்டியென்ன, அனந்துவுடைய நாடக உலக அறிமுகம், விமர்சனம் என்ன—அந்தக் கணையாழிதான் எவ்வளவு ஆத்மார்த்தமானது எவ்வளவு இதமானது ! ‘சிலி‘யில் ஜனநாயகக் கொலை நடந்தால் கணையாழி கருத்து சொல்லும். இந்தியப் பாராளுமன்ற அரசியலமைப்பின் பலம், பலஹீனம் பற்றி அரசியல் கட்சி நிலவரங்களோடு சேர்ந்து புள்ளி விவரம் தரும். இரு தள உலகில் குறை போஷாக்குத் தன்மை, ஏர்முனை என விஞ்ஞான ஆய்வுகளைக் கட்டுரையாகக் கொடுக்கும். இத்துணை அளவிற்கு சமுகப் பொறுப்புணர்ச்சியோடு கருத்துப் பரிமாற்றம் செய்து ஆத்மார்த்தமான இலக்கியத் தேடலுக்கு, ரசனைக்கு அடியெடுத்துக் கொடுத்தது.

75 - 80 என்று பார்த்தால், இதற்கு முந்தைய ஐந்தாண்டுகளின் கனத்திற்குக் குறையாமல், புதிய சங்கதிகளும், புதிய எழுத்தாளர்களுமாய், மாதம் இருமுறை என சில காலம் வெளியாகி அறிவிற்கும் ஆத்ம தேடலுக்கும் பெருந்துணையாக விளங்கியது. ஞானி, கௌடில்யர், பரந்தாமன் வினையான அரசியலை விகட பாஷையில் சொல்ல, சுஜாதாவும் இ. பா , வும் சயன்ஸ் ஃபிக்ஷன் எழுத, நாஞ்சில்நாடன், எ எச். கே. கோரி, லட்சுமி கண்ணன் கதை எழுத, மாலனும் மலர்மன்னனும் துணுக்குத் தர, கணையாழிக்குப் புதிய உற்சாகம் பிறந்திருந்தது. கோஷ்டிச் சண்டைகள் பெருத்திருந்த அந்தக் காலகட்டத்திலும் தான் எதிலும் சிக்கிவிடாமல் ( சில சமயம், முஸ்தபா கோர்ட் மார்ஷல் தவிர்த்து) தனி முத்திரையுடன் பொலிந்த அக்காலமே கணையாழியின் பொற்காலம்.

80க்கு மேல் கணையாழிக்குத் திடீரென்று வயதேறிவிட்டது. அரசியலிலிருந்து சந்நியாசம் வாங்கிக் கொண்டது. துணுக்குக் கச்சேரியை நிறுத்திக்கொண்டது. செய்திக் கட்டுரைகளைத் தவிர்த்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து கொண்டிருந்த வரைபடங்கள் முற்றிலும் காணாமல் போய்விட வெறும் எழுத்து... எழுத்து... எழுத்து.

80 லிருந்து இன்றை வரை கணையாழியைப் பொத்தாம் பொதுவாய்த் தேக்க காலம் எனப் பொதுவாய் சொல்லக் கூடாது என்றாலும்,