பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

315


ஜானகிராமனின் ‘மரப்பசு‘, ‘நளபாகம்‘ நாவல்கள் கணையாழியில் தொடர்கதைகளாக எழுதப்பட்டவைதான்.

அசோமித்திரன் படைப்புகளும் தண்ணீர், பதினெட்டாவது அட்சக் கோடு முதலியவை—கணையாழியில் தொடர்ந்து பிரசுரம் பெற்றுள்ளன. இந்திரா பார்த்தசாரதி நாவல்களையும் அது வெளியிட்டது.

குறுநாவல் வளர்ச்சிக்குக் கணையாழி வெகுவாக சேவை செய்து வருகிறது. அது அளிக்கும் ஆதரவின் பலனாக பல நல்ல குறுநாவல்கள் ஆண்டுதோறும் வெளிவருகின்றன.

கணையாழி எழுத்தாளர்களின் பத்திரிகையாக வளர்ந்து வந்திருக்கிறது என்று சொல்லலாம். வளர்ந்து பெயர் பெற்றுள்ள எழுத்தாளர்களும், வளர்ந்து கொண்டிருக்கும் இளைய எழுத்தாளர்களும், வளர்ச்சி பெற விரும்புகிற புதிய எழுத்தாளர்களும் கணையாழியில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதியிருக்கிறார்கள், எழுதி வருகிறார்கள்.

ஆகவே, பல்வேறு ரகமான எழுத்துக்கள் கணையாழியில் இடம் பெறுகின்றன. கலைத்தரமான படைப்புகளும், சோதனை ரீதியான எழுத்துக்களும் அதில் காணப்படுகின்றன.

கணையாழி ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் புதுக் கவிதை வளர்ச்சியில் அக்கறை உடைய ஒரு கவிஞராக இருப்பதால், கணையாழி கவிதை முயற்சிகளுக்கு ஆரம்பம் முதலே, ஊக்கமும் உற்சாகமும் காட்டி வருகிறது. ‘எழுத்து‘, ‘கசடதபற’ வழிப்பட்ட கவிதைகள்—தனி மனித உணர்வுகள், மனப்பதிவுகள், அக உளைச்சல்கள் முதலியவற்றை அடிப்படையாக்கிக் கவிதை படைக்க முயல்வோரின் எழுத்துக்கள், கணையாழியில் வருகின்றன.

அவ்வப்போது கணையாழி புதிய திசைகளில் தனது கவனத்தைச் செலுத்த ஆசைப்படுகிறது.

உதாரணமாக, ஒரு சமயம் அது இப்படி ஒரு சிந்தனையை எழுப்பியது. ‘விஞ்ஞானத்தின் தொழில்நுட்பம், நிர்வாக இயல், பொறிஇயல், கணிதம் போன்ற துறைகளிலும்தான் நூற்றுக்கணக்கான மேதைகள் நம் நாட்டில் தோன்றியிருக்கிறார்கள், தோன்றி வருகிறார்கள். ஆனால் இவர்கள் படிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கிற இலக்கியம், பார்க்கிற சினிமா, கேட்கிற இசை, இவற்றைக் காணும்போது, இவ்வளவு மேதையும் அறிவுப் பிரகாசமும், பாமர ரசிப்பும் எப்படி ஒரே உள்ளத்தில் சகவாழ்வு வாழ்கின்றன என்று பிரமிக்கத் தோன்றுகிறது. இதற்கு யார் பொறுப்பு ?